ETV Bharat / bharat

DK Shivakumar’s Helicopter: ஹெலிகாப்டரில் மோதிய கழுகு - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய டி.கே.சிவக்குமார்!

author img

By

Published : May 2, 2023, 4:03 PM IST

Etv Bharat
Etv Bharat

DK Shivakumar’s Helicopter:கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதியதால் ஹெலிகாப்டர் அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

DK Shivakumar’s Helicopter:பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவைத்தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களின் பலத்தைக் காட்ட தங்களின் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (Karnataka Pradesh Congress Committee) தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்திற்காக கோலார் அருகே உள்ள முளுபாகிலு (Mulbagalu) பகுதிக்குச் சென்று கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், கோஸ்ட்கோட் அருகே அவர் தனது ஹெலிகாப்டரில் வானில் பறந்துகொண்டிருந்தபோது, அவ்வழியாக குறுக்கே வந்த கழுகுப்பறவை ஒன்று ஹெலிகாப்டரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதனால், ஹெலிகாப்டரின் கண்ணாடி நொறுங்கியது. இதனால், செய்வதறியாது தவித்த விமானி, சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை ஹெச்ஏஎல் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த டி.கே.சிவக்குமார் தரையிறங்கியதும் பெருமூச்சுவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, வான்வழி போக்குவரத்தை ரத்து செய்த அவர், சாலை வழியாக முளுபாகிலு பகுதிக்கு சென்றார். இதனிடையே, சிவக்குமார் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கண்ணாடி உடைந்த ஹெலிகாப்டரின் புகைப்படங்களை கர்நாடக காங்கிரஸார் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து டி.கே.சிவக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், "முளுபாகிலுக்கு நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எங்கள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எனது சகப் பயணிகள் சிலர் காயமடைந்தனர். அனைத்து கன்னடர்களின் வேண்டுதல்களுக்கு நன்றி. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அசம்பாவிதம் நிகழ்வதற்குள் அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கியதற்கு விமானிக்கு நன்றி. இப்போது சாலை வழியாக முளுபாகிலுக்கு பயணம் செய்ய உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

'ஜக்கூர் விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டரில் கழுகு மோதி விபத்தானது. இதனால், ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்த நிலையில், வேறு எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது' என்று கர்நாடக காங்கிரஸ் தரப்பில் டிவிட்டரில் இது குறித்து கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டப் பல முக்கியத் தலைவர்கள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவருக்கு ரூ.2,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 வழங்குவதாக அம்மாநில காங்கிரஸ் உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Karnataka Congress: அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 -காங்., தேர்தல் வாக்குறுதி முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.