ETV Bharat / bharat

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 15 பேர் கொண்ட குழு அமைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 5:34 PM IST

karnataka state education policy: தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக கர்நாடகாவில் புதிய மாநில கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்க முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் சுக்தேவ் த்ரோட் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்து உள்ளது.

Karnataka
Karnataka

பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை நிறுவுவது தொடர்பாக ஆராய முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் சுக்தேவ் த்ரோட் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்து உள்ளது.

இந்த குழு மாநில கல்விக் கொள்கை தொடர்பாக ஆராய்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிக்கு வரைவு அறிக்கையை வழங்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. தேசிய கல்விக் கொள்கைக்குத் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்வது குறித்து மாநில அரசு முடிவு செய்து உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கல்வியாளர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசியக் கல்வியை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், புதிய மாநில கல்விக் கொள்கை குறித்து ஆராய்வது தொடர்பாக முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் சுக்தேவ் த்ரோட் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்து உள்ளது. இந்த குழுவில் 8 பாடங்களில் அதிக புலமை பெற்ற கல்வியாளர்கள் இடம் பெற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியர் நிரஞ்சன் ராதையா, ரஹமத் தரிகிரி உள்ளிட்ட முக்கிய இலக்கியவாதிகளும் இந்த குழுவில் இடம் பிடித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த 15 பேர் கொண்ட குழு புதிய மாநில கல்விக் கொள்கை குறிந்து ஆராய்ந்து அடுத்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பைக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுக்தேவ் த்ரோட் தலைமையில் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. விஞ்ஞானம், அறிவுசார் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான கல்வி ஆகியவற்றை வளர்ப்பதற்கு இந்த குழு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் என்று தான் நம்புவதாகவும், கர்நாடக மாநிலக் கல்விக் கொள்கை நாட்டிற்கு முன்மாதிரியான கல்விக் கொள்கையாக இருக்கும் என தான் எண்ணுவதாகவும் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : பூட்டிய கேட்டில் ஏறி குதித்த அகிலேஷ் யாதவ்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.