ETV Bharat / bharat

தமிழர்களிடம் நூதன முறையில் ரூ.2.67 கோடி அபேஸ்.. டெல்லியில் ரயில்களை எண்ணிய அவலம்!

author img

By

Published : Dec 21, 2022, 10:46 AM IST

டெல்லியில் ரயிலை எண்ணிய தமிழ்நாட்டு இளைஞர்கள்.. வேலைவாய்ப்பு மோசடியில் புது யுக்தி!
டெல்லியில் ரயிலை எண்ணிய தமிழ்நாட்டு இளைஞர்கள்.. வேலைவாய்ப்பு மோசடியில் புது யுக்தி!

டெல்லி ரயில் நிலையத்தில், தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தெரியாமல் தமிழக இளைஞர்கள் ஒருமாத காலமாக ரயில்களை எண்ணிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: நாட்டில் பல்வேறு வகைகளில் மோசடி வேலைகள் அரங்கேறி வருகிறது. முக்கியமாக வேலைவாய்ப்பு மோசடி என்பது தற்போது அதிகளவில் காணப்படுகிறது. அந்த வகையில் ரயில்வேயில் வேலை தருவதாகக் கூறி ரூ.2.67 கோடியை நூதனமாகத் திருடியுள்ளது, ஒரு கும்பல்.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின்படி, ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர்கள் மற்றும் எழுத்தர் பதவிகளுக்கான வேலையை வாங்கித் தருவதாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த சிவராமன் என்பவர் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறிய சிவராமனை நம்பி, சுப்புசாமி பணம் வழங்கியுள்ளார். மேலும் தனக்குத் தெரிந்த இளைஞர்களையும் இதில் இணைத்துள்ளார், சுப்புசாமி. இதன்மூலம் ஒரு நபர் ரூ.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரையில் கொடுத்துள்ளதாக சுப்புசாமி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட மோசடி கும்பல், விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி எனக் கூறி டெல்லி ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்களின் வருகை மற்றும் அவற்றில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடக் கூறியுள்ளது. மேலும் ஒவ்வொரு முறை மோசடி மன்னர்களைச் சந்திக்கும் விண்ணப்பதாரர்கள், ரயில் நிலையத்துக்கு வெளியிலோ அல்லது தனிப்பட்ட இடத்திலோ மட்டுமே அவர்களைச் சந்தித்துள்ளனர்.

இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 இளைஞர்கள், தான் ஏமாற்றப்படுகிறோம் எனத் தெரியாமலே தினமும் எட்டு மணி நேரம் ஒரு மாதத்துக்கும் மேலாக ரயில்களைக் கணக்கிடும் பணியில் ஈட்டுப்பட்டிருந்தனர் என்பதுதான் மற்றொரு துயரமான செய்தி.

இதில் பல இளைஞர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் எனக் கூறியுள்ளார், மதுரையைச் சேர்ந்த ஸ்நேதில் குமார். மேலும் நாங்கள் விகாஸ் ராணா என்பவரிடம்தான் எப்போதும் பணம் கொடுப்போம் எனவும் குமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், விசாரணையை முடுக்கி விட்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், பயிற்சி சான்றிதழ், பணி நியமன கடிதங்கள் ஆகிய அனைத்தும் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்ட விகாஸ் ராணா மற்றும் அவரது கூட்டாளியான துபே உள்பட மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அதேநேரம் வேலை தேடும் இளைஞர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என ரயில்வே சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் பெயரில் பண மோசடி - நெல்லையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.