ETV Bharat / bharat

5வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்ந்த சந்திரயான்-3 விண்கலம்; இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

author img

By

Published : Jul 25, 2023, 3:32 PM IST

Updated : Aug 11, 2023, 2:20 PM IST

Chandrayaan-3
Chandrayaan-3

பூமியின் 5-வது சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்: சந்திரயான் 3 விண்கலம் பூமியின் 5வது சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ(ISRO) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் விணகலத்தின் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ள நிலையில், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள ஈர்ப்பு விசையின் மூலம் விண்கலத்தை இயக்குவதன் மூலம் வீண் எரிபொருள் விரயம் உள்ளிட்டவைகளை தடுக்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக பூமியின் சுற்றுவட்ட பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் கடந்த 15ஆம் தேதி முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். பூமியின் முதல் சுற்றுவட்ட பாதையில் 15ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்த கட்டமாக ஜூலை 17ஆம் தேதி இரண்டாவது வட்ட பாதையிலும், 3வது வட்ட பாதைக்கு 18ஆம் தேதியிலும், அதேபோல் 4வது வட்ட பாதைக்கு 20ஆம் தேதியும் நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூலை 25) மதியம் 2.47 மணிக்கு 5வது வட்ட பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழையும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் செல்லும் சந்திரயான் அதில் இருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நிலவின் சுற்றுவட்டபாதையில் ஒவ்வொரு அடுக்குகளாக நுழைந்து தென் துருவத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் முடிவு

Last Updated :Aug 11, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.