குஜராத் தேர்தலில் வெற்றியா..? புதிய சாதனையா..? மோடியின் அரசியல் கணக்கு என்ன..?

author img

By

Published : Nov 22, 2022, 4:27 PM IST

Updated : Nov 22, 2022, 4:52 PM IST

மோடியின் அரசியல் கணக்கு என்ன..?

"குஜராத்தில் பாஜக வேட்பாளர் யார்..? என்று மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தாமரையை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களிக்கும் போது, இது பாஜக, இது மோடி என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு வாக்கும் நேரடியாக மோடியின் கணக்கில் வந்து சேரும்" பிரதமர் மோடியின் குஜராத் அரசியல் வியூகம் குறித்த சிறப்பு தொகுப்பு பின்வருமாறு.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டம் டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே பிரதானமாக மோதிக்கொண்ட மாநிலத்தில் மும்முனை போட்டியாக ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கிவிட்டது. ஆம் ஆத்மி மற்ற கட்சிகளை போலல்லாமல் 2 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகாவின் மூத்த தலைவர்கள் முக்கிய நகரங்களில் முகாமிட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரதமர் மோடி, தேர்தல் வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டார்.

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதும், அப்போது பாஜகவின் சாதனை விளக்குவதும், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதையும் செய்துவந்தார். குஜராத்தில் தொடர்ந்து 7ஆவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக செயல்பட்டுவருவது போல மக்களுக்கு தெரியலாம். ஆனால், பிரதமர் மோடி வெற்றி பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், மோடி வரலாற்று வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியே. 1985ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மாதவ்சிங் சோலங்கியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 182 இடங்களில் 149 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியே வரலாற்று சாதனையாகும். இவ்வளவு தொகுதிகளில் எந்த கட்சியும் அந்த மாநிலத்தில் வெற்றிப்பெற்றதில்லை. 2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கி 127 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றார். இதுவே குஜராத்தில் பாஜகவின் உட்சபட்சமாக வெற்றியாக இருக்கிறது.

இந்த எண்ணிக்கையை 150ஆக உயர்த்தும் அரசியல் கணக்குகளை நரேந்திர மோடி வகுத்துவருகிறார். வெற்றி பெற்றால் போதுமே என்று தோன்றலாம், ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பாஜகாவின் தலையெழுத்தை மாற்ற முற்பட்டுவருகிறது. வட மாநிலங்களில் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கவும், பாஜகவுக்கு எதிராக எந்த கட்சியும் வேரூன்றிவிட கூடாது என்றும் மோடி எதிர்பார்க்கிறார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி மோடியை இன்னும் சூடேற்றிவிட்டது. 2 மாதங்களுக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சி சௌராஷ்டிராவில் போட்டியிடும் பகுதிகளில் பரப்புரையை தொடங்கினாலும், அந்த தொகுதி வேட்பாளர்கள் பலருக்கு தெரியாத முகங்களாகவே உள்ளனர். இதன் காரணமாக பெரிதாக பரப்புரை எடுபடவில்லை என்று அரசியல் விமசகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வெற்றி காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கிகளை மட்டுமே பாதிக்கும் என்றும் பாஜகவுக்கு சரிவை தருவது சந்தேகமே என்றும் தெரிவிக்கின்றனர். சொல்லப்போனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெறும் 99 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இந்த எண்ணிக்கை 27 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சிக்கு வந்ததபோதே கிடைத்துவிட்டன. இதை நுணுக்கமாக கவனித்தால் பாஜகவுக்கு 99 தொகுதிகளில் மிகப்பெரும் பலம் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

2001ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை குஜராத்தில் முதலமைச்சராக இருந்த மோடி, மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றுவிட்டார். மோடிக்கு பின் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி ஆகியோர் படேல் சமூகத்தின் இடஒதுக்கீட்டுக்கான விவகாரத்தில் மாநிலத்தில் செல்வாக்கை இழந்தனர். இது பாஜகவின் வாங்கு வங்கியையும் பாதித்தது. இருப்பினும், மோடியின் ஆளுமை மற்றும் மண்ணின் மைந்தன் என்னும் தகுதிகள் வாங்குவங்கியை அதிகரிக்கவும், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறவும் உதவியாக இருக்கின்றன. இதற்கேற்றார் போலவே பிரதமரின் பரப்புரை கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பிட்டு சொன்னால், மோடி குஜராத் வேட்பாளர்களை நம்பி பரப்புரை செய்வது கிடையாது. இது அவரது தேர்தல் பரப்புரைகளை உன்னிப்பாக கவனித்தாலே புரிந்துவிடும். குஜராத்தில் நவம்பர் 6ஆம் தேதி நடந்த தேர்தல் உரையில் மோடி கூறுகையில், குஜராத்தில் பாஜக வேட்பாளர் யார்..? என்று மக்கள் நினைவில் கொள்ள வேண்டியதில்லை. தாமரையை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களிக்கும் போது, இது பாஜக, இது மோடி என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு வாக்கும் நேரடியாக மோடியின் கணக்கில் வந்து சேரும். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். முந்தைய தேர்தல் பதிவுகளை முறியடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

அதேபோல, வாக்காளர்களிடம் மோடி கூறும் மற்றொரு விஷயம் என்னவென்றால், குஜராத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள். இந்த தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெற்றி பெறுவதிலேயே எனது முழு கவனம் உள்ளது என்று மறைமுகமாக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் தேர்தல் வியூகங்களை வகுத்துவருகிறார். தற்போதைய முதலமைச்சர் பூபேந்திர படேலின் மக்கள் செல்வாக்கை அவர் பொருட்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பிரதமர் மோடி 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அசாத்தியமான முடிவை எடுத்தார். மக்கள் செல்வாக்கை இழந்த முதலமைச்சர் விஜய் ரூபானியை மாற்றினார். அவருடன் அமைச்சர்களாக இருந்த மூத்த தலைவர்களையும் பதவி நீக்கம் செய்தார். இவர்களுக்கு இந்தாண்டு தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பாஜக படேல் சமூகத்தின் ஆதரவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளே. இந்த படேல் சமூகம் ஒருவேளை பாஜக பக்கம் சாய்ந்தால் மோடியின் வரலாற்று வெற்றி உறுதியே. குஜராத் மக்கள் தன்னை வீழ்த்த மாட்டார்கள் என்பதில் மோடிக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

நர்மதா அணை கட்டியது முதல் உப்பு உற்பத்தி தொழிலை ஊக்குவித்தது வரை ஒவ்வொரு பரப்புரையிலும் தனது சாதனைகளை மட்டுமே மேற்கோள்காட்டி அவரது பரப்புரை இருக்கிறது. 1995, 1998, 2002, 2007, 2012, 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றது. மீண்டும் வெற்றி பெற்றால் வரலாறு படைக்கும் என்பதே நிதர்சனம். மோடியின் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்பது 2 மாதங்களில் தெரிந்துவிடும். மறுப்புறும் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் ஆதரவு உள்ளது என்றாலும், காங்கிரஸ் தலைவர்கள் அந்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ளவில்லை என்பதே இன்றைய காங்கிரஸ் வரலாறாகும். மூத்த பத்திரிக்கையாளர் சேகர் ஐயர்.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: ஆட்சியை தக்கவைக்க பாஜகவின் வியூகங்களும் சவால்களும்

Last Updated :Nov 22, 2022, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.