ETV Bharat / bharat

நாட்டில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிவைக் கண்ட கரோனா பாதிப்பு

author img

By

Published : Jan 11, 2021, 2:28 PM IST

Updated : Jan 11, 2021, 3:19 PM IST

இந்தியாவில் கரோனா பரவல்
இந்தியாவில் கரோனா பரவல்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 311 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 311 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, கரோனா தொற்று எண்ணிக்கை 16 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த ஆறு மாதங்களிலேயே குறைந்தபட்சமாக கடந்த ஜனவரி 5ஆம் தேதி புதிதாக 16 ஆயிரத்து 375 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், 161 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தற்போதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், நாடு முழுவதும் ஒரு கோடியே 92 ஆயிரத்து 909 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போதுவரை இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 526 பேர் கரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதனால் குணமடைந்தோர் விழுக்காடு 96.43 ஆகவும், உயிரிழந்தோர் விழுக்காடு 1.44 ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை (ஜன. 10) நாடு முழுவதும், 18 கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து 831 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும், ஆறு லட்சத்து 59 ஆயிரத்து 209 ரத்த மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் 19 லட்சத்து 69 ஆயிரத்து 114 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 82.25 விழுக்காடு கரோனா பாதிப்புகள், கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பிகார், குஜராத் ஆகிய ஒன்பது மாநிலங்களில் பதிவாகின்றன.

இந்நிலையில், வரும் 16ஆம் தேதிமுதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் உள்பட 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஸ்டார்ட்-அப் இந்தியா சர்வதேச மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்' - பிரதமர் மோடி

Last Updated :Jan 11, 2021, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.