ETV Bharat / bharat

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உடனடி விவாதம்.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 26, 2023, 8:25 PM IST

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை நாளை (ஜூலை. 27) நடத்தக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

Congress
Congress

டெல்லி : பாஜக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை நாளை (ஜூலை. 27) நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தி இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றன. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டன. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரின் 5வது நாளான இன்று (ஜூலை. 26) மக்களவையில் அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவு கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

முன்னதாக தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி. நம நாகேஸ்வர் ராவ்வும், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை வழங்கினார். அந்த நோட்டிசையும் ஏற்றுக் கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சி தலைவர்களுடனும் விவாதித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசின் மீது விவாதம் நடத்துவதற்கான தேதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை நாளை (ஜூலை. 27) நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தினாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவியில் ஒட்டுமொத்தமாக 330 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

அதேநேரம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணிக்கு (INDIA) 140 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக எளிதில் வெல்லும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை மணிப்பூர் வன்முறை, அதானி விவாகரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து வாய் திறக்க வைக்க முடியும் என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம்.. தப்புமா பாஜக அரசு! நடைமுறை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.