ETV Bharat / bharat

'புல்லட் பைக் கொடுத்தால் தான் தாலி கட்டுவேன்'... அடம் பிடித்த மாப்பிள்ளை... நின்று போன திருமணம்!

author img

By

Published : May 23, 2023, 5:22 PM IST

marriage
திருமணம்

புல்லட் பைக், ரூ.3 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என மணமகன் கூறியதால், திருமணம் நின்றது. இதுகுறித்து பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அல்வார்: குஜராத் மாநிலம், அல்வார் அருகே உள்ள திக்ரி பகுதியைச் சேர்ந்தவர், கல்லு கான். இவரது மகளுக்கும், கோபால்கர் பகுதியைச் சேர்ந்த முபீனின் மகன் நசீர் கானுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் மணமகன் வரதட்சணை கேட்டதால், திருமணம் நின்றுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த 21ம் தேதி மதச் சடங்கின்படி திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிவடைந்த பிறகு, திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விருந்தினர்களுக்குப் பல்வேறு உணவுகளும் பரிமாற்றப்பட்டன. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, திருமணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. திருமணத்துக்காக மணமகன் குடும்பத்தினர் கேட்ட அனைத்துப் பொருட்களையும், மணமகள் வீட்டின் தரப்பில் வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணம் நடைபெற சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென மணமகன் நசீர் கான் தனக்கு புல்லட் பைக், ரூ.3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் எனக் கேட்டுள்ளார். இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை, தம்மிடம் பணம் இல்லை என்றும், பைக் மற்றும் பணம் தர முடியாது எனவும் கூறியுள்ளார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது ஏன் இதை கேட்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி, மணமகன் நசீரிடம், கல்லுகான் கெஞ்சியுள்ளார். இதனால் திருமண நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருமணத்துக்கு அதிகமாக செலவு செய்துவிட்டதால் தன்னால் புல்லட் பைக், ரூ.3 லட்சத்தை வரதட்சணையாக கொடுக்க முடியாது என கல்லு கான் தெரிவித்தார். ஆனால் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் நடக்கும் என, மணமகன் குடும்பத்தினர் பிடிவாதமாக இருந்தனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூக தீர்வு எட்டப்படவில்லை. கடைசியில் திருமணம் நின்று போனது. திருமண மண்டபத்தை காலி செய்துவிட்டு, மணமகன் குடும்பத்தினர் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து கோவிந்த்கர் காவல் நிலையத்தில், கல்லுகான் புகார் அளித்தார். வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகன் நசீர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. வரதட்சணையால் திருமணம் நின்று போன சம்பவம், திக்ரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: 'சரக்கு' அடித்து வந்த மாப்பிள்ளை...திருமணத்தை நிறுத்திய மணமகள்...சோகத்தில் முடிந்த 90's கிட்ஸ் திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.