ETV Bharat / bharat

அதிக உப்பு ரொம்ப தப்பு! மூளை செயல்பாடுகள் பாதிக்கும்? - ஆய்வில் தகவல்!

author img

By

Published : May 30, 2023, 9:00 PM IST

Hypertension
மூளை

அதிகளவு உப்பு உட்கொள்வதால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளையை செயலிழப்புக்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உப்பு நுகர்வு கொள்கையை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தவும் இந்த ஆய்வு உலக சுகாதார நிறுவனத்திற்கு பரிந்துரை செய்கிறது.

டெல்லி: ஜப்பானைச் சேர்ந்த ஃபுஜிடா பல்கலைக்கழகம் அதிக உப்பு உட்கொள்வதால் மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் பார்மகாலஜியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அதிகளவு உப்பு உட்கொள்வதால், ரத்த அழுத்த ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் சில லிப்பிட் மூலக்கூறுகளுக்கு இடையில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும், இதன் காரணமாக மூளையில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மூளை செயலிழக்கக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் ஹிசயோஷி குபோடா கூறும்போது, "அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், மூளை செயலிழப்பு மற்றும் டிமென்ஷியாவை ஏற்படுத்தும் ஆபத்து காரணியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், புற மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு இடையிலான தொடர்புகளை மையமாகக் கொண்ட ஆய்வுகள் இந்த தொடர்பை போதுமான அளவு ஆய்வு செய்யவில்லை. அதிகப்படியான உப்பு உட்கொள்ளல், மூளையில் உள்ள முக்கிய செல்லான டவ்(tau)-ல் அதிகப்படியான பாஸ்பேட்டுகளைச் சேர்ப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நரம்பு மண்டலத்திலும், மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படும். டவ் செல்களில் பாதிப்பு ஏற்பட்டால் அல்சைமர் (Alzheimer) போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் அகிஹிரோ மௌரி கூறும்போது, "இந்த ஆய்வில், ஆய்வக எலிகளுக்கு உப்புக் கரைசலை 12 வாரங்களுக்கு ஏற்றி, அவற்றின் ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தோம். அதிகளவு உப்புக் கரைசலை உட்கொள்வதால், எலிகளின் மூளையில் உள்ள இரண்டு முக்கிய பகுதிகளான ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் (prefrontal cortex) மற்றும் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆராயப்பட்டன. உப்பு உட்கொண்டதால் எலிகளின் உடம்பில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், எலிகளின் மூளை பல உயிர்வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.

மூளை செல்களுக்கிடையேயான இணைப்புகளை ஒழுங்கமைத்தல் மற்றும் செயல்படுத்தும் பணியை செய்யும் முக்கிய புரதமான PSD95-ன் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் கவனித்தோம். இதையடுத்து எலிகளுக்கு லோசார்டன் (losartan) என்ற உயர் ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் எதிர்ப்பு மருந்தை கொடுத்தபோது, எலிகளின் மூளையில் ஏற்பட்ட இந்த உயிர்வேதியியல் மாற்றங்கள் அனைத்தும் மாறுவது கண்டறியப்பட்டது" என்று விளக்கினார்.

அதிகளவு உப்பு உட்கொள்வதால் மூளை செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என்ற உப்பு நுகர்வு கொள்கையை உலக நாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது.

இதையும் படிங்க: உப்பு நுகர்வை குறைங்க.. உலக நாடுகளுக்கு WHO விடுத்த வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.