ETV Bharat / bharat

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து; நவ.12 முதல் இன்று வரை என்ன நடக்கிறது? முழு விவரம்!

author img

By PTI

Published : Nov 24, 2023, 12:06 PM IST

Updated : Nov 24, 2023, 12:37 PM IST

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து

Uttarkashi Tunnel Accident: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்க விபத்தில் மீட்புப்பணியின்போது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பார்க்கலாம்.

உத்தரகாசி: உத்தரகாண்ட்டில் உள்ள உத்தரகாசி மாவட்ட பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை பணியில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு, சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. அதில் பணியாற்றிய 41 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தற்போது வரை சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.

விபத்து ஏற்பட்டு இன்றுடன் (நவ.24) 12 நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதும் உறுதியாகி உள்ளது. மேலும், அவர்கள் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ்விபத்து நிகழந்தது முதல் தற்போது வரை என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை காலக்கோடு முறையில் பார்க்கலாம்.

  1. நவ.12: சில்க்யாரா - தண்டல்கான் இடையே அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, நவ.12 அதிகாலை 5.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இதில் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, காற்று அழுத்தப்பட்ட குழாய்கள் (Air-Compressed pipes) மூலம் தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன், மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இதனை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF - National Disaster Response Force), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF - State Disaster Response Force), எல்லை சாலைகள் அமைப்பு (BRO - Border Roads Organisation), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL - National Highways & Infrastructure Development Corporation Limited) மற்றும் இந்திய-திபெத் எல்லை காவல்படை (ITBP - Indo Tibetan Border Police) போன்ற பல ஏஜென்சிகள் மீட்புப் பணியில் இணைந்தன.
  2. நவ.13: ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் குழாய் மூலம் தொழிலாளர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்ற உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி, சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதனை அடுத்து மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், புதிய இடிபாடுகள் ஏற்பட்டன.
  3. நவ.14: 800 மற்றும் 900 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட எஃகு குழாய்கள் அமைக்க, துளையிடும் கருவி மூலம் கிடைமட்டமாக தோண்டப்பட்டது. ஆனால், துளையிடும்போது அதிக இடிபாடுகள் ஏற்பட்டு, தொழிலாளர்களுக்கு சிறிது காயங்கள் ஏற்பட்டன. மேலும், தொழிலாளர்கள் சிலருக்கு தலைவலி, குமட்டல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உணவுப் பொருட்களுடன் மருந்துகளும் அனுப்பப்பட்டன.
  4. நவ.15: துளையிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் அதிநவீன துளையிடும் இயந்திரம் வழங்குமாறு கேட்டுக் கொண்டது.
  5. நவ.16: நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, நள்ளிரவுக்கு மேல் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
  6. நவ.17: சுமார் 24 மீட்டர் வரை துளையிடப்பட்டு, நான்கு எம்.எஸ் குழாய்கள் செருகப்பட்டன. ஐந்தாவது குழாய் செருகும்போது சிறிய தடை ஏற்பட்டதால் பணி நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தூரில் இருந்து மற்றொரு அதிக செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து பணி தொடர்ந்தபோது, சுரங்கப்பாதையில் ஒரு பெரிய விரிசல் சத்தம் கேட்டதை அடுத்து பணி நிறுத்தப்பட்டது.
  7. நவ.18: 1,750 குதிரை ஆற்றல் கொண்ட அமெரிக்கன் துளையிடும் இயந்திரத்தின் மூலம் பணி நடைபெற்றுக் கொண்டிந்தது. இவ்வேளையில் இந்த இயந்திரத்தின் மூலம் உருவான அதிர்வுகள், மீட்புப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பணி நிறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிடுவது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்தனர்.
  8. நவ.19: துளையிடும் பணி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீட்புப் பணியை மதிப்பாய்வு செய்தார்.
  9. நவ.20: பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமியை தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மனவலிமையை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மீட்புப் பணியாளர்கள் ஆறு அங்குல அகலமுள்ள குழாயை இடிபாடுகள் வழியாக செருகினர். இக்குழாய் மூலம் அதிகளவிலான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
  10. நவ.21: சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோவை மீட்புக்குழுவினர் வெளியிட்டனர். சார்தாம் வழித்தடத்தில் கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதையின் பால்கோட் முனையில் 2 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மற்றொரு முனை சில்க்யாராவில் துளையிடும் இயந்திரம் கொண்டு துளையிடும் பணி தொடங்கப்பட்டது.
  11. நவ.22: மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ், உள்ளூர் சுகாதார நிலையத்தில் சிறப்பு வார்டுகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டன. தொழிலாளர்களை அடைய 57 மீட்டர் துளையிட வேண்டி இருந்தது. இந்நிலையில், துளையிடும் பணிகள் 45 மீட்டர் முடிவடைந்து, மீதம் 12 மீட்டர் மட்டுமே இருந்தது. துளையிடும்போது இரும்பு கம்பிகளின் தடையினால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.
  12. நவ.23: மீட்புப் பணியில் தடையாக இருந்த இரும்பு அடைப்பு காலையில் அகற்றப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. நவம்பர் 22 இரவு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு துளையிடும் பணி 1.8 மீட்டர் முன்னேறியது. துளையிடும் பணிகள் 48 மீட்டர் புள்ளியை எட்டிய நிலையில், துளையிடும் இயந்திரம் உள்ள இடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துளையிடும் பணி சற்று தாமதமாக நடந்து வருகிறது.
  13. நவ.24: துளைகளின் வழியே குழாய் மறு பக்கத்தை அடைந்தவுடன், சக்கரமுள்ள ஸ்ட்ரெச்சர்கள் (wheeled stretchers) மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என தேசிய பேரிடர் மீட்பு படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி குறித்து விமர்சனம்..! ராகுல்காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Last Updated :Nov 24, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.