ETV Bharat / bharat

ஐநாவில் பேசிய நித்தியானந்தா சிஷ்யை பரபரப்பு குற்றச்சாட்டு

author img

By

Published : Mar 3, 2023, 3:56 PM IST

நித்தியானந்தா மற்றும் கைலாசாவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள இந்து விரோத சக்திகள் வன்முறையை தூண்டுவதாகவும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதாகவும், கைலாசா நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதியான விஜயபிரியா குற்றம் சாட்டியுள்ளார். இந்த இந்து விரோத சக்திகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

UN i
UN i

தமிழ்நாட்டில் பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கிய சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தற்போது இந்தியாவை விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. தனக்கென கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் கைலாசா நாடு இருப்பதாக கூறியபோது, ஏராளமானோர் அந்த நாட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அங்கு செல்ல பாஸ்போர்ட் எடுப்பது எப்படி? அந்த நாடு எங்கு இருக்கிறது? எப்படி வருவது? என நெட்டிசன்கள் பலரும் ஆர்வத்துடன் கேட்டனர். ஆனால், இதுவரை கைலாசா குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை. பல்வேறு பாலியல் புகார்கள் இருந்தபோதும், காவல்துறையோ, மத்திய மாநில அரசுகளோ இதுவரை நித்யானந்தாவை பிடிக்க முயற்சித்ததாக தெரியவில்லை.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, கைலாசா நாட்டைச் சேர்ந்த நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர், ஐநா பொதுச்சபையில் கலந்து கொண்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கைலாசா நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா என்ற இளம்பெண் பெண்கள் உரிமை குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இதைப் பார்த்த பலரும், உண்மையில் கைலாசா நாடு இருக்கிறதா? அதனை ஐநா அங்கீகரித்துவிட்டதா? என்றும் குழப்பமடைந்தனர். ஆனால், ஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தில், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் பேசலாம் - அதை வைத்தே நித்தியானந்தாவின் சிஷ்யைகள் ஐநா கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்தது.

அதோடு, அந்த பெண்கள் பேசிய கருத்துகள் எதையும் தாங்கள் கருத்தில் கொள்ளப்போவதில்லை என ஐநா சபை அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர். அதன் பிறகே, ஐநாவில் பேசியதைப் பயன்படுத்தி, கைலாசாவை ஐநா அங்கீகரித்தது போன்ற தோற்றத்தை சமூக வலைதளங்களில் நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், கைலாசாவின் பிரதிநிதியாக ஐநாவில் பேசிய அமெரிக்காவைச் சேர்ந்த விஜயபிரியா என்ற இளம்பெண் இன்று(மார்ச்.3) சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐநாவில் தான் பேசிய கருத்துகள் திட்டமிட்டு தவறாக திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், சில இந்து எதிர்ப்பு சக்திகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நித்தியானந்தாவை அவரது சொந்த நாட்டில் உள்ள சில இந்து எதிர்ப்பு சக்திகள் துன்புறுத்துவதாகவும், கைலாசா நாடு இந்தியாவை மிகவும் மதிக்கிறது என்றும், அதனை குரூபீடமாக கருதுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். நித்தியானந்தா மற்றும் கைலாசாவுக்கு எதிராக இந்து விரோத சக்திகள் வன்முறையை தூண்டுவதாகவும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த இந்து விரோத சக்திகள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்த இளம்பெண் விஜயபிரியா, கைலாசா நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதியாக தன்னை கூறிக்கொண்டார். அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நித்தியானந்தா குறித்தும், கைலாசா குறித்தும் பரப்புரை செய்யும் வகையில் ஏராளமான பதிவுகளை பகிர்ந்து வந்தார். நித்தியானந்தாவை தனது பகவானாக கருதி பூஜிப்பதாகவும் கூறினார். கையில் நித்தியானந்தாவின் உருவத்தை பெரிதாக பச்சை குத்தியிருக்கும் இந்த இளம்பெண் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இவர் கனடாவில் பட்டப்படிப்பு முடித்தவர் என்றும், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.