ETV Bharat / bharat

+2 கணித தேர்வில் காப்பியடிக்க உதவிய அதிகாரிகள் சஸ்பெண்ட்!

author img

By

Published : Apr 8, 2023, 7:00 PM IST

Officials who helped to copy in +2 maths exams who were suspended!
கோப்புப்படம்

உதகை அருகே பிளஸ் 2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவிய கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ஆம் தேதி தொடங்கி 4-ஆம்தேதி வரை நடைபெற்றது. இதில், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவற்றில் 3525 மாணவர்கள், 3915 மாணவிகள் என மொத்தம் 7440 பேர் தேர்வுகள் எழுதினர். மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் என மொத்தம் 761 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

மேலும், பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க, 69 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த 27-ஆம் தேதி நடந்த கணித தேர்வில் மாணவ மாணவிகள் ஒரு சிலருக்கு, தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதைச் சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கணிதத் தேர்வில் சில வினாக்கள் கடினமாகவும், ஆழமாக யோசித்து விடையளிக்கும் வகையிலிருந்ததாகவும், அன்றைய தினம் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.