ETV Bharat / bharat

இந்த தீபாவளி பட்டாசுகளை அப்படியே சாப்பிடலாம்!

author img

By

Published : Nov 14, 2020, 10:03 AM IST

இந்த தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தாலும், மும்பையைச் சேர்ந்த சரிகா ஷாஹுவின் பட்டாசு சாக்லேட்டுகளை மக்கள் சத்தம்போடாமல் ரசித்து சுவைக்க முடியும். அணுகுண்டு, சங்குசக்கரம், மத்தாப்பு வடிவில் சாக்லேட் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

deepawali
deepawali

மும்பை: தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவின் மஹிம் நகரைச் சேர்ந்த சரிகா ஷாஹு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு தனித்துவமான முறையில் சாக்லேட் பட்டாசுகளை உருவாக்கியுள்ளார்.

தீபாவளி என்றதுமே புத்தாடைகளும், இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்களும், விதவிதமான பட்டாசுகளும் நம் நினைவுக்கு வரும். ஆண்டுதோறும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் புதுப்புது ரகங்களில் வெடிகள், மத்தாப்புகள் அறிமுகமாகின்றன.

அந்தவகையில், மும்பையைச் சேர்ந்த சரிகா ஷாஹூ என்ற பெண்மணி சத்தமில்லாமல் சுவைத்து சாப்பிடும் இனிப்பு வெடிகளை தயாரித்துள்ளார். சாப்பிடும் வகையில் உருவாகியுள்ள இனிப்பு பட்டாசுகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுமை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உருவாகியுள்ள இனிப்பு பட்டாசுகள் பார்க்க அச்சு அசலாக பட்டாசு போலவே காட்சியளிக்கிறது. அணுகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி வெடி, ராக்கெட் வெடி, புஷ்வானம் உள்ளிட்ட பலவகையான வகையில் உருவாகியுள்ள சாக்லேட் பட்டாசுகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கண்ணைக் கவரும் வகையில் பார்க்க அணுகுண்டு, சங்குசக்கரம் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த இனிப்பு வகைகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து சரிகா சாஹூ கூறுகையில், "கடந்த மூன்று வருடங்களாக தனது வீட்டிலேயே இதுபோன்ற இனிப்பு பண்டங்களை தீபாவளிக்காக ஸ்பெஷலாக தயாரித்து வருகிறேன். குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் பிடித்த வகையில் தயாரிக்க விரும்பியதுதான் இந்த சாக்லேட் பட்டாசு. தீபாவளி தொடங்க 15 நாள்களுக்கு முன்பே சாக்லேட் பட்டாசுகளை செய்யத் தொடங்கிவிடுவேன். நாளொன்றுக்கு சுமார் 15 கிலோ முதல் 20 கிலோ வரை விற்பனை செய்கிறேன். கரோனா காலத்திலும் சாக்லேட் பட்டாசுகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

மக்களும் புதுவகையான இனிப்பு பண்டங்களையே விரும்புகின்றனர். இந்த ஆண்டு சாக்லேட் பட்டாசுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கடந்த ஆண்டைவிட இந்த முறை குறைந்தளவே விற்பனையாகியுள்ளது. கரோனா தொற்று என்பதால் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய எல்லைப்பகுதியில் ஜவான்கள் தீபாவளி கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.