ETV Bharat / bharat

காடுகள் அழிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறதா?- கோவையில் ஓர் கள ஆய்வு

author img

By

Published : Nov 29, 2020, 8:08 PM IST

கோவை: சாலை விரிவாக்கம், புதிய கட்டடங்கள் கட்டுதல் எனப் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்படுவதால் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

காடுகள் அழிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறதா?- கோவையில் ஓர் கள ஆய்வு
காடுகள் அழிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறதா?- கோவையில் ஓர் கள ஆய்வு

இந்தியப் பரப்பில், 33 விழுக்காடு இருந்த காடுகள், தற்போது 22 விழுக்காடாக குறைந்துள்ளது. குறைந்துள்ள வனவளத்தை மீண்டும் பெற நாடு முழுவதும், 54 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. மரங்கள் குறைவதால் புவி வெப்பம் அதிகரிப்பதால் மழைப்பொழிவு குறைந்து, தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோவையைப் பொறுத்தவரை, சாலை விரிவாக்கம் மேம்பாலப் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக மரம் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்தின்போது, மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் சுமார் ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த மரங்களை வெட்டியதால், அவற்றில் தங்கியிருந்த பல பறவையினங்கள் காணாமல் போயின. குறிப்பாக பழந்தின்னி வௌவால், குயில் மற்றும் பல அரிய பறவையினங்கள் வெளியேறின.

மேட்டுப்பாளையம் சாலை மட்டுமல்லாது, அவிநாசி சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது. மரங்களை வெட்டியது சாலை விரிவாக்கத்திற்காக என ஊரக வளர்ச்சித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் தெரிவித்தது. ஆனால், இன்றுவரை சாலை விரிவடையவே இல்லை. மேலும் அவிநாசி சாலையில் இப்போதும் அதே போக்குவரத்து நெரிசலுடன் தான் உள்ளது. அது போல பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, தடாகம் சாலை, தொண்டாமுத்தூர் சாலை, திருச்சி சாலை என கோவை நகரின் சுவாசமாக இருந்த சாலைகளில், மரங்களை எல்லாம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையினர் வெட்டியுள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் கோவை நகரப்பகுதிக்குள் மட்டும் 5,000 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுள்ளது. ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அத்தகைய விதிமுறைகளை நெடுஞ்சாலைத்துறையினர், இதுவரை பின்பற்றவில்லை என சமூக ஆர்வலரும் மதிமுக இளைஞர் அணிச் செயலாளருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து மரங்களை வெட்டி வருகிறது. வெட்டிய மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கள் நடுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அக்கறை செலுத்தாத காரணத்தால், கோவையில் இன்றைக்கு மரங்களின் அடர்த்தி வெகுவாக குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைத்துறை எவ்வளவு மரங்கள் வெட்டி உள்ளது என்ற தகவலை வாங்கி, வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரங்கள் நடப்படவில்லை என்பதை வெளிக்கொண்டு வந்து, நெடுஞ்சாலைத்துறை வெட்டிய ஆயிரத்து 500 மரங்களுக்குப் பதிலாக 15 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கோவையில் பத்தாயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டுப் பராமரித்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரங்கள் நடும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அக்கறை செலுத்தாத காரணத்தால், கோவையில் மரங்கள் நடும் பணி மிகவும் குறைவாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் மரங்களுக்கும் மேல் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நெடுஞ்சாலைத்துறை கடைபிடிக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக மரம் நட்டு வளர்க்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன். அப்படி வைக்காவிட்டால் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன்' எனத் தெரிவித்தார்.

'மரம் நடப்படாததால் பசுமை பரப்பு குறைந்து வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. விரைவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். முன்பு உடனடியாக வெட்டிய மரங்களுக்குப் பதிலாக, அதிக மரக்கன்றுகள் நட வேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து மரங்களுக்கு மறுவாழ்வு என்ற அமைப்பின் தலைவர் சையது கூறுகையில், 'ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அவற்றை யாரும் முறையாக கடைபிடிப்பதில்லை. சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுவதால் வெப்ப நிலை மாறுபாடு ஏற்படுகிறது. இவ்வாறு பழமையான மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பழமையான மரங்களை வெட்ட நேர்ந்தால், அவற்றை அங்கிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று மறு நடவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட பழமையான மரங்களை நடவு செய்துள்ளோம். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் சாலை விரிவாக்கம் உள்ளிட்டப் பணிகளுக்காக பல வருடங்கள் ஆன மரங்களை வெட்டாமல், தங்களுக்குத் தகவல் அளித்தால் அதனை மாற்று இடத்தில் மறு நடவு செய்து தர தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் முறையாக அனுமதிபெற்று மரங்களை வெட்ட வேண்டும்; அனுமதியின்றி மரங்கள் வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை' - சமூக ஆர்வலர்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.