ETV Bharat / bharat

Chandrayaan-3 : ஒருநாள் நிலவு ஆராய்ச்சிக்கு இத்தனை கோடி செலவா? சந்திரயான்-3 முழுத் தகவல்!

author img

By

Published : Jul 13, 2023, 3:26 PM IST

Updated : Jul 13, 2023, 5:28 PM IST

Chandrayaan 3
Chandrayaan 3

ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 25 மணி நேர கவுன்டவுன் தொடங்கப்பட்டது. சந்திரயான்3 விண்கலம் ஒத்திகை வெற்றிகரமாக அமைந்த நிலையில், இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை : சந்திரயான் விண்கலம் நாளை (ஜூலை. 14) விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கான கவுன்டவுன் தொடங்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறக்கி ஆராயும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. இதற்காக LVM2 ராக்கெட் மூலம் சந்திரயான் விணகலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்தை அடைய குறுகிய இடைவெளியே இருந்த நிலையில், விணகலத்தினுடான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

விண்கலத்தின் லேண்டர் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலவில் லேண்டர் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ முக்கால்வாசி பணிகள் நிறைவு பெற்ற நிலையில், விணகலம் ஏவுதல் ஒத்திகையும் வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் எல்.வி.எம் 3 எம்.4 ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டது.

ராக்கெட்டில் திட மற்றும் திரவ வடிவிலான எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் விண்கலத்தின் மினியேச்சர் மாதிரியை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 25 மணி நேரம் 30 விநாடிகள் கவுண்டவுன் இன்று (ஜூலை. 13) மதியம் 1.05 மணி அளவில் தொடங்கப்பட்டது. 642 டன் எடை கொண்ட எல்.வி.எம்3 ராக்கெட்டில், முதல் தளத்தில் திட வடிவிலான எரிபொருளும், இரண்டாவது தளத்தில் திரவ எரிபொருளும், மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்திற்கு திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜன் கொண்டு இயங்கும் கிரியோஜினிக் என்ஜின் கொண்டு இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் விண்கலம் பயணிக்க உள்ளதாகவும், ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதி நிலவில் விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உந்துவிசை தொகுதியின் மூலம் சந்திரயான்3 விண்கலம் இயங்கக் கூடியது என்பதால், முந்தைய சந்திரயான் 2 விண்கலத்தை காட்டிலும் எடை குறைவு என்று கூறப்படுகிறது.

அதேநேரம் சந்திரயான் 2 விண்கலத்திற்கு ஏறத்தாழ 914 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில், சந்திரயான் 3 விண்கலத்திற்கு வெறும் 615 கோடி ரூபாய் மட்டுமே செலவாகி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் உந்துவிசை தொகுதியின் மூலம் லேண்டர் இயக்கப்படுவதால் சந்திரயான் 2 விண்கலத்தை காட்டிலும் சந்திரயான் 3 குறைந்த பட்ஜெட்டில் முடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுட்காலம் 1 நிலவு நாள் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. அதாவது நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களாகும். இதனால் ஏறத்தாழ 14 நாட்கள் நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் என நம்பப்படுவதாக இஸ்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : சந்திரயான் -3 விண்கலத்தின் கவுன்ட் டவுன் தொடங்கியது; திருப்பதியில் சிறப்புவழிபாட்டில் விஞ்ஞானிகள்

Last Updated :Jul 13, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.