ETV Bharat / bharat

டீ, பிஸ்கட்டுக்கு மாதம் ரூ.30 லட்சம் செலவு செய்த பஞ்சாப் அரசு.. ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Jun 19, 2023, 6:48 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் மாநில அரசு தினசரி தேநீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிக்கு ஒரே மாதத்தில் 30 லட்சம் ரூபாய் செலவளித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் அம்மாநிலத்தில் நடைபெறும் அரசியல் குறித்தும், ஆட்சி மீதான நன்மை, தீமைகள் குறித்தும் தனித்துவமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அம்மாநில அரசின் அன்றாட செலவினமான தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கான கணக்கு குறித்து ரஜன்தீப் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியுள்ளார். இந்நிலையில் இது குறித்து வெளியாகியுள்ள உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதத்திற்கு மட்டும் அம்மாநில அரசு தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக 30 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த 180 பில்களை அம்மாநில அரசு வைத்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அம்மாநில அரசு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளது என ரன்ஜன்தீப் சிங் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு ஜூலை 4ஆம் தேதி அம்மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின்போது தேநீர் மற்றும் தண்ணீருக்காக 8 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில் 5ஆம் தேதி அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தின்போது அதே தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக 4 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி, கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி அம்மாநில சபாநாயகர் குல்தார் சிங் சந்தவான் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே விதான்சபா என்ற சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேநீர் மற்றும் சிற்றுண்டி விநியோகம் செய்ததற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது எனவும், 2022 ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இணைந்து 30 லட்சம் ரூபாய்க்கு டீ மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளதாக ராஜன்தீப் சிங் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாளில் அதிகபட்சம் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக 200 ரூபாய் வீதம் 9 லட்சம் வரை ஆம் ஆத்மி தலைமையிலான அரசு செலவழித்துள்ளது எனவும், சாமானிய மக்களின் வரிப்பணத்தில் ஆம் ஆத்மி விருந்தளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தருணத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசின் நடவடிக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நடைமுறைப் படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நினைவு கூர்ந்த ராஜன்தீப் சிங், பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசுத் துறைகள் தங்களது துறை சார்ந்த விவரங்களை ஆர்டிஐ போர்ட்டலில் இருந்து நீக்கி வருவதாகவும் ராஜன்தீப் சிங் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு புது மைல்கல் - மத்திய வெளியுறவுத் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.