ETV Bharat / bharat

"பாரத ராஷ்டிர சமிதி அல்ல... பாஜக ரிஷ்தேதார் சமிதி" - கே.சி.ஆர். மீது ராகுல் காந்தி காட்டம்!

author img

By

Published : Jul 2, 2023, 10:38 PM IST

பாரத ராஷ்டிர சமிதியாக இருந்த கட்சி தற்போது பாஜக ரிஷ்தேதார் சமிதியாக செயல்படுகிறது - ராகுல் காந்தி காட்டம்
பாரத ராஷ்டிர சமிதியாக இருந்த கட்சி தற்போது பாஜக ரிஷ்தேதார் சமிதியாக செயல்படுகிறது - ராகுல் காந்தி காட்டம்

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொது கூட்டத்தில் பங்குபெற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர், பிரதமர் மோடியின் ரிமோட் கண்ட்ரோலராக விளங்குவதாக குற்றஞ்சாட்டினார்.

கம்மம்: சமீபத்தில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதனை அடுத்து இந்த மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் அவர்களது பிராசாரங்களை தொடங்கி உள்ளனர்.

ஒவ்வொரு கட்சிகளும் அவர்களின் பொது கூட்டங்களை காரசாரமாக நடத்தி வருகின்றன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றிய அதே யுக்திகளை கொண்டு அடுத்தடுத்த மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் சார்பில், தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில், பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவை வன்மையாக சாடினார்.

சமீப நாட்களாக பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல்பாடு அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்களை ஒத்துப்போவது போல் தென்படுவதாகவும் பாஜகவின் பீ-டீமாக செயல்பட தொடங்கிவிட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், தெலுங்கானா ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் தற்போது பாஜக வின் கொள்கைகளுக்கு இணங்கி அடிபணிய ஆரம்பித்து விட்டதாகவும், பாஜகவின் பீ- டீமாக செயல்பட்டு வருகின்றது என்றும் கூறினார். பாரத ராஷ்டிர சமிதிக்கு மாற்றாக பாஜக ரிஷ்தேதார் சமிதி என்று பெயர் மாற்றப்பட்டு இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வின் கட்சித் தலைவர்கள் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகவும், இனி பிஆர் எஸ் கலந்து கொள்ளும் எந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் காங்கிரஸ் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, கேசிஆர் தன்னை ஒரு ராஜாவாக கற்பனை செய்து, தெலுங்கானாவை அவரது ராஜ்யமாக எண்ணி கற்பனை வலையில் மிதந்து வருகிறார். பாரத ராஷ்டிர சமிதி போன்று நாடாளுமன்றத்தில் ஒருபோதும், மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்த திட்டங்களிலும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி துணை போனதில்லை என்றும் எந்த சூழ்நிலையிலும் துணை போகது என்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கு எந்த திட்டத்திற்கும் குரல் கொடுக்க காங்கிரஸ் தயங்கியதில்லை என்று கூறினார். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியின் ரீமோட் கண்ட்ரோலராக செயல்பட்டு வருகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். தெலங்கானா மாநிலத்தில் ஊழல்வாதிகள், லஞ்சம் பெறுபவர்கள் என ஏழை மக்களின் வாழ்வாதரத்தை சீர்குழைப்பவர்களை தோற்கடித்து ஏழை மக்கள், சிறுபான்மையினர், விவசாயிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி நடத்தும் என்று ராகுல் காந்தி கூறினார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஜிதேந்திர அவ்ஹாத் நியமனம்... தலைமை கொறடா யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.