ETV Bharat / bharat

விலைவாசி உயர்வைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணி!

author img

By

Published : Aug 11, 2022, 6:13 PM IST

Congress
Congress

விலைவாசி உயர்வைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லி: விலைவாசி உயர்வைக் கண்டித்து கடந்த 5ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து பங்கேற்றிருந்தனர்.

இந்தப்போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்ற நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத்தொகுதிகளிலும், வரும் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சந்தைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

வரும் 28ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக கடந்த 5ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டம் மக்களிடையே எதிரொலித்தது.

இந்தப் போராட்டத்தை பில்லி சூனியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசின் பாதுகாப்பின்மையையே காட்டுகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும்.

மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்யும். அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

அதேநேரம் நாட்டின் பொது சொத்துகளை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது, அக்னிபாத் போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கிறது. இதுபோன்ற மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள்" - ராகுல்காந்தி காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.