ETV Bharat / bharat

ராகுல் காந்தி உரையில் அவருக்கே முன்னுரிமை இல்லையா? சன்சாத் டிவி பாரபட்சம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

author img

By

Published : Aug 9, 2023, 6:56 PM IST

நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்பும் சன்சாத் டிவி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையின் போது அவரை 40 சதவீதத்திற்கும் குறைவாகவே காண்பித்ததாகவும், பெரும்பாலும் சபாநாயகர் ஓம் பிர்லாவையே மையப்படுத்தியதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

Rahul Gandhi
Rahul Gandhi

டெல்லி : நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாகாரங்கள் குறித்து ராகுல் காந்தி பேசும் போதெல்லாம் அவர் காட்டப்படாமல், சபாநாயகர் ஒம் பிர்லாவை மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்ட். 8) தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை துணை தலைவரும், அசாம் மாநில எம்.பியுமான கவுரவ் கோகாய், தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர். அதேபோல் மத்திய அரசு தரப்பில் எம்.பி. நிஷிகாந்த் துபே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் விவாதித்தனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது.

விவாதத்தை எம்.பி. கவுரவ் கோகாய் தொடங்கி வைத்த நிலையில், மக்களவையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் கூட்டங்களை சன்சாத் என்ற டிவி ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் ராகுல் காந்தி மக்களவையில் முக்கியமான கருத்துகள் குறித்து விவாதம் நடத்தும் போதெல்லாம் அவருக்கு பதிலாக சபாநாயகர் ஓம் பிர்லா காண்பிக்கப்பட்டதாக கூறப்படுவது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி உரையாற்றும் போது, ஓட்டுமொத்தமாக அவரை 40 சதவீதம் மட்டுமே சன்சாத் டிவி ஒளிபரப்பியதாக கூறினார்.

மக்களவையில் ஏறத்தாழ 37 நிமிடங்கள் ராகுல் காந்தி உரையாற்றிய நிலையில், சன்சாத் டிவி வெறும் 14 நிமிடங்கள் 37 விநாடிகள் மட்டுமே காண்பித்ததாக ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து மட்டும் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் 42 விநாடிகள் பேசியதாகவும், அப்போது சன்சாத் டிவி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை 11 நிமிடம் 8 விநாடிகள் என ஒட்டுமொத்தமாக 71 சதவீதம் அவரை மட்டுமே காண்பித்ததாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

அதேபோல் திமுக எம்.பி. கனிமொழி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் உரையாற்றும் போது இதேபோன்று சன்சாத் டிவி செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : "திரெளபதிக்கு நடந்ததை வேடிக்கை பார்த்தவர்களுக்கு நேர்ந்தது போல் மணிப்பூர் விவகாரத்தில் உங்களுக்கு நடக்கும்" - கனிமொழி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.