ETV Bharat / bharat

Mumbai Opposition Meeting: பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை - மு.க.ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:19 PM IST

Mumbai Opposition Meeting cm Stalin said BJP will lose in the upcoming parliamentary election
Mumbai Opposition Meeting cm Stalin said BJP will lose in the upcoming parliamentary election

மும்பையில் நடைபெறும் எதிர்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வருகின்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளார்.

மும்பை: வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் முதற்கட்ட கூட்டம் பிகார் தலைநகர் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாவது கட்ட கூட்டம், கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (I.N.D.I.A) என பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், எதிர்கட்சிகளின் மூன்றாவது கட்ட கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது, கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும், கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது.

நமது கூட்டணியின் பலத்தைவிட ‘இந்தியா’ என்ற பெயரே பாரதீய ஜனதா கட்சிக்குப் பயத்தையும், காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பாஜகவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எதிர்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள்; ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பாஜக நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து, அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.

பாஜக ஆட்சியை வீழ்த்தி, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை மத்தியில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பாஜகவைத் தனிமைப்படுத்தும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்து தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும், குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பாஜக ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும்.

ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கூட்டணி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.