ETV Bharat / bharat

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 8:48 AM IST

Etv Bharat
Etv Bharat

Athipalli Firecrackers shop fire accident: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பெங்களூரு (கர்நாடகா): கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தமிழ்நாட்டின் மாநில எல்லையான ஜூஜூவாடியில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி அருகே தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்த நிலையில், தீபாவளியையொட்டி மேலும் 2 கடைகளை அருகிலே பட்டாசு கடை நிர்வாகம் திறந்து உள்ளது. இந்தக் கடையில் அரூர், கள்ளக்குறிச்சி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் வேலை செய்து வந்து உள்ளனர்.

இந்நிலையில், கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, தீ மளமளவென பரவத் தொடங்கிய நிலையில், வாகனத்தில் ஏற்றிச் சென்ற அனைத்து பட்டாசுகளும் தீக்கு இரையானது. பின்னர், இது குறித்து அத்திப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரமாக போராடி தீயை அணைக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், விபத்து குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பி வைத்து உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேபோல், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டு உள்ள X பதிவில், “பெங்களூரு நகர் மாவட்டம், ஆனேக்கல் அருகே இருந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். நாளை (அக்.8) விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

அதேநேரம், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சம்பவம் நடந்த நேரடியாக சென்று பாரவையிட்டார். அதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.