ETV Bharat / bharat

குமரி to ஜோத்பூர்: விமானத்தில் சென்ற சினேரியஸ் கழுகு - வழிதவறிய கழுகிற்கு அரசு செய்த பெரும் உதவி!

author img

By

Published : Nov 3, 2022, 8:14 PM IST

Updated : Nov 3, 2022, 10:55 PM IST

cinereous
cinereous

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, 'ஒகி' புயலில் வழி தவறி குமரி வந்த, 'சினேரியஸ் கழுகு' பாதுகாப்பான முறையில் ஜோத்பூர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு விரைவில் அதன் இனக்குழுவுடன் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: ஒகி புயலின்போது, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வழி தவறி வந்த சினேரியஸ் கழுகு ஒன்றை தமிழ்நாடு வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பராமரித்து வந்த நிலையில், அதனை சினேரியஸ் வகை கழுகுகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் கொண்டு செல்லத்திட்டமிட்டு இருந்தது. அதன்படி, மத்திய விமான அமைச்சகத்தின் உதவியோடு சென்னையிலிருந்து இன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரில் 'மச்சியா உயிரியல் பூங்கா'-விற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

வழி மாறி வந்த சினேரியஸ் கழுகு: தமிழ்நாடு வனத்துறையானது இதுகுறித்து இன்று (நவ.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்த நிலையில் கடந்த 2017-ல் ஆண்டு ஒகி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகு, வனத்துறையினரால் மீட்கப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. அன்று முதல் இப்பறவை வனத்துறை அலுவலர்களால் சீரான, சரியான, தொடர்ந்து கவனம் செலுத்தி பராமரிக்கப்பட்டு, நல்ல நிலையில் 'உதயகிரி உயிரியல் பூங்கா'-வில் இருந்தது.

மீட்டுப்பராமரித்த குமரி வனத்துறை: இப்போது, இந்த சினேரியஸ் கழுகு காட்டில் வாழ்வதற்கான தகுந்த உடல்நிலையோடு இருக்கிறது. ஒகி புயலின் நினைவாக இந்த சினேரியஸ் கழுகிற்கு, “ஒகி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சினேரியஸ் வகை கழுகானது, அதிக தொலைவு இடம் பெயர்ந்தும், கூட்டமாக வாழும் ஒரு சமூகப்பறவை ஆகும். இந்த வகை கழுகுகள் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன. இவை 7 முதல் 14 கிலோ எடையும், 3 மீட்டர் வரை நீளம் கொண்ட இறக்கைகளும், வளைந்த அலகும் கொண்டவை. இந்த வகை ராட்சத கழுகுகள் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதாகத்தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இவை அரிய வகைக் கழுகுகள் தான். இவை 14,800 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டவை.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறையானது சிறப்பு முயற்சிகள் எடுத்து, இப்பறவையை இயற்கைச் சூழலில் மீள அனுப்ப ஆணையிட்டுள்ளது. தனியாக மீட்கப்பட்ட அலைந்து திரியும் இயல்புடைய இளம் சினேரியஸ் கழுகு இனமானது, காற்றோட்டத்திசையின் மாறுபாடு காரணமாக கன்னியாகுமரியை வந்தடைந்து இருக்கலாம். பெரிய கழுகு பெரும்பாலும், காற்றோட்ட திசை மற்றும் பருவநிலை சார்ந்த வெப்பத்தின் அடிப்படையில் உயரப் பறக்கும் தன்மையுடையது.

சூழலுக்கேற்ற இடத்தில் கொண்டு சேர்க்க முடிவு: பருவநிலை மாறுபாட்டால், இந்த இளம் கழுகு பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவில், சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, வட இந்தியாவில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கலாம் என்று பரிந்துரை பெறப்பட்டது. இதற்காக, ராஜஸ்தான் மாநில வனஉயிரின பாதுகாவலரிடமிருந்து தேவையான அனுமதி பெறப்பட்டது.

கழுகினங்களின் இருப்பிடமான “கெரு”: ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடை சடலங்களை சேகரித்து கழுகினங்களுக்கு உணவளிக்கும் பல இடங்கள் உள்ளன. அதில், ஜோத்பூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள “கெரு” என்ற இடத்தில் இருக்கும் கால்நடை சடலங்களை சேகரித்து வைக்கும் இடத்தில், அதே வகை கழுகினங்கள் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகினை விடுவிக்கக்கூடிய சரியான இடமாக பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் இந்த இடத்திற்கு அருகில் ஜோத்பூர் உயிரியல் பூங்கா அதாவது அங்குள்ள 'மச்சியா உயிரியல் பூங்கா'வில் வளர்ப்பு கழுகுகளை பராமரிக்கத்தேவையான வசதிகள் உள்ளன. இந்த இடத்தை கழுகின் உடலில் உரிய டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு இயற்கைச்சூழலில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

விமானத்தில் பறந்த கழுகு: இந்த உயிரியல் பூங்கா கன்னியாகுமரியிலிருந்து சுமார் 2,600 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கழுகை சாலை (அ) ரயில் மார்க்கமாகக் கொண்டு செல்வதற்கு 4 முதல் 5 நாட்கள் ஆகும். மேலும், நெடுந்தூர சாலை மற்றும் ரயில் பயணம் செய்ய வைப்பதனால் இப்பறவைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, இந்த கழுகினை வான் வழியாக ஜோத்பூர் கொண்டு செல்ல மத்திய விமான அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்ததோடு, இதற்கென்று வனத்துறைக்கும் தகுந்த உதவிகளை அளித்தது. அதன் அடிப்படையில் இந்த கழுகு கீழ்க்கண்டவாறு ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஜோத்பூர் உயிரியல் பூங்காவை அடைந்த கழுகு: கடந்த அக்.30ஆம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து சாலை மார்க்கமாக வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா சென்றடைந்தது. அக்.31 முதல் நவ.2 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் தீவிரமாகப் பராமரிக்கப்பட்டது. இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் போதிய காற்றோட்ட வசதியுடன், உயிருள்ள விலங்குகளை கொண்டு செல்வதற்கென்று உள்ள சர்வதேச விமான பயண நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கழுகு கொண்டு செல்லப்பட்டது.

விரைவில் இயற்கை சூழலில் விடுவிப்பு: விமானப்பயணத்தின்போது, இக்கழுகுக்கு தேவையான காற்றோட்ட வசதி, போதிய இட வசதியுடன் கொண்டு செல்வதற்கு ஏர் இந்தியா விமான பைலட்டுகள் பெறும் உதவி புரிந்தனர். டெல்லி விமான நிலையத்தில் பயண இடைநிறுத்தத்தின்போது தேவையான பராமரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமான பைலட்டுகள் மற்றும் பணியாளர்களின் சிறந்த உதவியுடன் இந்த கழுகு ஜோத்பூர் உயிரினப்பூங்காவை இன்று பிற்பகல் அடைந்தது.

இந்திய வன உயிரின நிறுவனத்தின் மூலம் இப்பறவைக்கு டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு இன்று (நவ.3) காலையில் சினேரியஸ் ஜோத்பூர் சென்றடைந்த கழுகு, அங்குள்ள மச்சியா உயிரியல் பூங்காவில் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அதனை அப்பறவையின் இனக்குழுவுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி to ஜோத்பூர்: விமானத்தில் சென்ற சினேரியஸ் கழுகு.. விரைவில் இயற்கை சுழலில் விடுவிப்பு

இதையும் படிங்க: பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு

Last Updated :Nov 3, 2022, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.