வெங்கையா நாயுடுவால் சீற்றமடைந்த சீனா: பதிலடி தந்த இந்தியா!

author img

By

Published : Oct 14, 2021, 9:45 AM IST

Updated : Oct 14, 2021, 11:49 AM IST

வெங்கய்யா நாயுடு, Venkaiah Naidu

அருணாசலப் பிரதேசத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகை தந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அருணாசலப் பிரதேச சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் கலந்துகொண்டார்.

இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளைச் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும். அருணாசலப் பிரதேசத்திற்கு இந்தியத் தலைவரின் வருகையை சீனா உறுதியாக எதிர்க்கிறது" எனக் கூறியிருந்தது.

இது எங்கள் பூமி

ஏனென்றால், சீனா நீண்ட காலமாக அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஓர் பகுதியாகதான் கருதிவருகிறது. இதனால், அருணாசலப் பிரதேசத்திற்குத் தலைவர்கள் வருகைதரும் போதெல்லாம் சீனா கண்டனம் தெரிவித்துவந்தது.

சீனாவின் கூற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது, "சீனாவின் இதுபோன்ற கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது.

அருணாசலப் பிரதேசம் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியத் தலைவர்கள் நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்குச் செல்வதுபோன்று அருணாசலப் பிரதேசத்திற்குச் செல்வதும் வழக்கம்தான்.

மேற்கொண்டு சிக்கலாக்க வேண்டாம்

முன்னர், தெரிவித்ததுபோல் கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு சீனா, இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான் காரணம். இதுபோன்ற விஷயங்களில் விரைவில் தீர்வுகாண வேண்டுமே தவிர, தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, இரு நாட்டு ராணுவ அலுவலர்களுக்கு இடையிலான கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 10) 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இந்திய ராணுவம் முன்வைத்த ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காந்தியை தேசத் தந்தையாக கருதவில்லை - சொல்கிறார் சாவர்கர் பேரன்

Last Updated :Oct 14, 2021, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.