ETV Bharat / bharat

Balu Dhanorkar: மகாராஷ்ட்ராவின் ஒரே காங்கிரஸ் எம்பி காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

author img

By

Published : May 30, 2023, 1:36 PM IST

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஒரே காங்கிரஸ் எம்பி பாலு தனோர்கர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chandrapur
மகாராஷ்ட்ரா

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபூர் தொகுதியிலிருந்து ஒரே ஒரு எம்பி மட்டுமே இருந்தார். சந்திரபூர் தொகுதி எம்பியான பாலு தனோர்கருக்கு அண்மைக் காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. 47 வயதான தனோர்கர் குடல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாலு தனோர்கர் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக கல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே குடல் தொற்று இருந்த நிலையில், இந்த அறுவை சிகிச்சையால் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாக்பூரில் இருந்து டெல்லிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தனோர்கர் நேற்று(மே.29) இரவு சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் வரோராவில் தகனம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். எம்பி பாலு தனோர்கரின் தந்தையும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காலமானார். தனோர்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலில்தான் அவரது தந்தை உயிரிழந்தார். அப்போது பாலு தனோகர் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரால் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு தனோர்கரும் காலமானார்.

மாநிலத்தின் ஒரே ஒரு எம்பியும் உயிரிழந்ததால் மகாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் கட்சியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்திரபூர் மக்களவை உறுப்பினர் பாலு தனோர்கர் திடீரென காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகவும், தனோர்கர் தனது தொகுதி மற்றும் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்திரபூர் மக்களவை உறுப்பினர் பாலுபாவ் தனோர்கரின் மறைவு வருத்தமளிக்கிறது என்றும், பொது சேவை மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் செய்த பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்றும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாநிலத்தின் இளமையான, துடிப்பான மக்கள் பிரதிநிதியை இழந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

தனோர்கர் மறைவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சந்திரப்பூர் தொகுதியில் பின் தங்கிய கிராமப்புறங்களில் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வந்தவர் தனோர்கர் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் தனோர்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Rajasthan Election 2023 : அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே சமரசம்? ராஜஸ்தான் அரசியல் நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.