ETV Bharat / bharat

கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பின்போது உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

author img

By PTI

Published : Oct 20, 2023, 2:06 PM IST

Updated : Oct 20, 2023, 4:37 PM IST

Supreme Court
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பின்போது உயிரிழப்பு - ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Supreme Court: கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: நாட்டில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களை கடுமையாகக் கண்டித்து, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, அதன் விளைவாக நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை, மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

இது மட்டுமல்லாது, தூய்மைப் பணியாளர்களுக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், அதேநேரம் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் கண்காணிப்பதைத் தடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜூலை 2022இல் நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டப்பட்ட அரசு தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு 347 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும், குறிப்பாக 40 சதவிகிதம் உயிரிழப்பு உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதி - 15 நாட்களில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Last Updated :Oct 20, 2023, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.