ETV Bharat / bharat

ரயில் விபத்து குறித்த விசாரணையை தொடங்கியது சிபிஐ - அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு!

author img

By

Published : Jun 6, 2023, 5:03 PM IST

Updated : Jun 6, 2023, 6:03 PM IST

CBI Enquiry
சிபிஐ விசாரணை

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கிய நிலையில், 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிக்னல் இன்டர்லாக்கிங் காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்தது. எனினும் இவ்விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த ரயில்வே அமைச்சகம், கடந்த ஞாயிறன்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகத்தின் பரிந்துரை மற்றும் ஒடிசா மாநில அரசின் ஒப்புதலை தொடர்ந்து, ரயில் விபத்து வழக்கு விசாரணையை சிபிஐ இன்று (ஜூன் 6) ஏற்றுக் கொண்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் தண்டவாளம், சிக்னல் அறை ஆகியவற்றை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பிற உபகரணங்கள் செயல்படும் விதம் குறித்தும் விசாரித்தனர். சிபிஐ அதிகாரிகளுடன் தடயவியல் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்யா சவுத்ரி கூறுகையில், "ரயில் விபத்து வழக்கை சிபிஐ பல்வேறு கோணங்களில் விசாரிக்க உள்ளது. இதற்கு ரயில்வே நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்" என கூறினார்.

விபத்து தொடர்பான வீடியோ ஆதாரங்களை பார்க்கும் போது, கோரமண்டல் விரைவு ரயிலின் என்ஜின், லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது ஏறியுள்ளது. சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைன் வழியாகவே கோரமண்டல் விரைவு ரயிலும் இயக்கப்பட்டுள்ளதா என, சில ரயில்வே ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரயில் விபத்துக்கு காரணம் மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா? நாச வேலையா? என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் புறப்பட்டது. ஒடிசா மாநிலம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்ற போது லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, விரைவு ரயில் மோதியது. இதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது சிதறிய பெட்டிகள் மீது எதிரே வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா ரயில் மோதி தடம் புரண்டது. அடுத்தடுத்த நிமிடங்களில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: Odisha Train Accident: சிபிஐ விசாரணை என்பது திசை திருப்பும் முயற்சி - ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

Last Updated :Jun 6, 2023, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.