ETV Bharat / bharat

பெகாசஸ் விவகாரத்தில் அரசை குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை - ரவிசங்கர் பிரசாத்

author img

By

Published : Jul 19, 2021, 9:21 PM IST

பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், Ravi Shankar Prasad,
பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

பெகாசஸ் உளவு செயலி மூலம் பல அரசியல் பிரமுகர்களின் அலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர அமித் ஷா ஆகியோர் மீது குற்றஞ்சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை என பாஜக மூத்தத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவர், மூத்தப் பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்எஸ்எஸ் மூத்தத் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 19) இந்த விவகாரம் குறித்து விவாதத்தை எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'பெகாசஸ் செயலி மூலம் ஒன்றிய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை' எனத் தெரிவித்தார்.

தேசவிரோத சக்திகள்

இதையடுத்து, பாஜக மூத்தத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:

"தி வையர், என்ஜிஓ அமைப்பான அமென்ஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள பெகாசஸ் விவகாரம் நம்பகத்தன்மையற்றது. 'தி வையர்' வெளியிட்டுள்ள செய்திகள் இதற்கு முன்னர் பலமுறை தவறாகியுள்ளன. அமென்ஸ்டி இன்டர்நேஷனல் பலமுறை இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவந்துள்ளது.

ஒட்டுக்கேட்டதாகக் கூறப்பட்டவர்களின் பட்டியலில் உள்ள எவருமே, பெகாசஸ் செயலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறவில்லை. இதை, அந்தச் செய்தியை வெளியிட்டவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.

காங்கிரசின் வீழ்ச்சி

இந்த விவகாரம் சரியாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான இன்று (ஜூன் 19) வெளியாகியிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவதில் எந்த அடிப்படை முகாந்திரம் இல்லை. இதனை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இது 50 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சிசெய்த காங்கிரசின் வீழ்ச்சியையே குறிக்கிறது.

அதாவது, 1885ஆம் ஆண்டு இந்தியத் தந்திச் சட்டம் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69 ஆகியவற்றின்படி, மின்னணு தகவல் தொடர்புக்குச் சட்டப்பூர்வமான குறுக்கீடுகளை மட்டுமே செய்ய முடியும். இந்தியாவில் சட்டவிரோதமாக உளவு பார்த்தல் என்பது சாத்தியமில்லை. அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது எனத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: மோடி அரசு எதிர்க்கட்சிகளை வேவு பார்ப்பது அதிர்ச்சி - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.