டெல்லி: நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்முவை, காங்கிரஸ் எம்பியும், மக்களவை காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முர்முவை "ராஷ்ட்ரபத்னி" என்று கூறி விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு திரண்ட மத்திய பாஜக அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்.பிக்கள், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது இந்த விமர்சனம் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் உள்ளதால், காங்கிரஸ் கட்சியும், ரஞ்சன் சவுத்ரியும் மன்னிப்பு கோர வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "நான் வாய்தவறி ராஷ்ட்ரபத்னி என்று கூறிவிட்டேன். இதை பாஜகவினர் திட்டமிட்டு பூதாகரமாக மாற்றுகிறார்கள். மடுவை மலையாக்க பார்க்கிறார்கள். குடியரசுத் தலைவரை இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. அதனால் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த பிரச்சனைக்காக என்னை தூக்கிலிட வேண்டும் என ஆளுங்கட்சியினர் ஆசைப்பட்டால் செய்து கொள்ளலாம்" என்று கூறினார். அதேநேரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதனிடையே ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க:சந்தால் மற்றும் பஷ்டூன்: இரண்டு பழங்குடியின பெண்களின் மைல்கல்லுக்கும் அப்பாற்பட்ட கதை