ETV Bharat / bharat

காட்டெருமையைக் கண்டதும் சுட உத்தரவு - 3 பேரை கொன்றதால் ஆணை

author img

By

Published : May 19, 2023, 4:48 PM IST

Bison attack
காட்டெருமை

கேரள மாநிலத்தில் இருவேறு இடங்களில் காட்டெருமை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கனமாலா பகுதியை சேர்ந்தவர், புராதெல் சாக்கோ. இவர் இன்று (மே 19) காலை தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த காட்டெருமை, சாக்கோவை ஆக்ரோஷத்துடன் முட்டித்தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய காட்டெருமை, அதே பகுதியைச் சேர்ந்த புனந்தாரா தாமஸ் என்பவரை கொடூரமாகத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதேபோல் கொல்லம் மாவட்டம், எடமுலேக்கல் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் வர்கீஸ், துபாயில் வேலை பார்த்து வருகிறார். கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர், வீட்டின் அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டெருமை வர்கீஸை முட்டித்தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார். காட்டெருமை தாக்கி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், கனமாலா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த வனத்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை சமரசப்படுத்தினர். 2 பேரை தாக்கிய காட்டெருமை திரிச்சூர் மாவட்டம் சாலக்குடியில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், மலப்புரம் மாவட்டம் நிலாம்பூர் பகுதியைச் சேர்ந்த வெலுட்டா என்பவர், தேன் சேகரிப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த புதன்கிழமை எருமேலி துமரம்பாரா பகுதியில் வீடுகளில் இருந்த ஆடு, நாய் ஆகியவற்றை மர்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்தன. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி, கால்நடைகளை தாக்கியிருக்கக் கூடும் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். வெளியே செல்லவே அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிலாம்பூர் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று மூன்று பேரை கொன்ற காட்டெருமையினை, கோட்டயம் மாவட்ட ஆட்சியர் கண்டவுடன் சுட, வனத்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட அமைப்பினர் குறித்த தகவலுக்கு ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிப்பு!

இதையும் படிங்க: இன்று மாலை இறுதியாகும் கர்நாடக அமைச்சரவைப் பட்டியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.