ETV Bharat / bharat

பஞ்சாபில் உச்சத்தை தொடும் உழவர் போராட்டம்: தொடர் ரயில் மறியல் இன்று தொடக்கம்!

author img

By

Published : Sep 24, 2020, 4:31 PM IST

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு அறிவித்த ரயில் மறியல் போராட்டம் இன்று தொடங்கியது.

பஞ்சாபில் உச்சத்தை தொடும் உழவர் போராட்டம்: தொடர் ரயில் மறியல் இன்று தொடங்கியது!
பஞ்சாபில் உச்சத்தை தொடும் உழவர் போராட்டம்: தொடர் ரயில் மறியல் இன்று தொடங்கியது!

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் 'உழவர்களுக்கு எதிரான சதி' எனக் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன.

நாடு முழுவதும் மத்திய அரசின் இந்தச் சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட முன்வடிவுகளை எதிர்த்து கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு அறிவித்த 'ரெயில் ரோகோ' போராட்டம் இன்று காலையில் தொடங்கியது.

இன்றுமுதல் செப்டம்பர் 26ஆம் தேதிவரை நடைபெறும் இந்தப் போராட்டத்தின் காரணமாக 14 இணை சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

கோல்டன் டெம்பிள் மெயில் (அமிர்தசரஸ்-மும்பை சென்ட்ரல்), ஜான் சதாப்தி எக்ஸ்பிரஸ் (ஹரித்வார்-அமிர்தசரஸ்), புதுடெல்லி-ஜம்மு தாவி, கரம்பூமி (அமிர்தசரஸ்-புதிய ஜல்பைகுரி), சச்சண்ட் எக்ஸ்பிரஸ் (நந்தேத்-அமிர்தசரஸ்) எக்ஸ்பிரஸ் (அமிர்தசரஸ்-ஜெயநகர்) ஆகிய ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே சொத்துகளை எந்தச் சேதமும் ஏற்படாமல் பாதுகாத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் போராட்டத்திற்கு அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்பட பல பிரிவுகள் ஆதரவு அளித்துவருகின்றன. அதேபோல, பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) உள்ளிட்ட 31 விவசாய அமைப்புகளும் குழுவின் போராட்டத்தில் கைக்கோர்த்துள்ளன.

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர், "நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களை பெருநிறுவனங்களின் அடிமைகளாக்கவே இந்தச் சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இதனை ஆதரித்த அரசியல் கட்சிகள் பஞ்சாபில் இனி ஒருபோதும் வெல்ல முடியாது. அவர்கள் சமூக ரீதியான புறக்கணிப்பை எதிர்க்கொள்வார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்விடுக்கிறேன். மக்கள் போராட்டம் மக்கள் போராட்டமாகவே தொடரட்டும்.

இந்தச் சட்ட முன்வடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்" என எச்சரித்தார்.

பஞ்சாபை தொடர்ந்து தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்ட முன்வடிவுகளை எதிர்த்து உழவர் போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.