ETV Bharat / bharat

நமது பாரம்பரியத்தின் நவீன அடையாளமாக ராமர் கோயில் விளங்கும் - மோடி!

author img

By

Published : Aug 5, 2020, 2:53 PM IST

மோடி
மோடி

லக்னோ: நம் கலாசாரம், நவீன பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக ராமர் கோயில் விளங்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்குச் சென்றார். அவரை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அடிக்கல் நாட்டிய பிறகு உரையாற்றிய மோடி, பாரம்பரியத்தின் நவீன அடையாளமாக ராமர் கோயில் விளங்கும் என தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "ஜெய் ஸ்ரீராம் என்ற உங்களின் முழக்கம் அயோத்தியில் மட்டும் கேட்கவில்லை. உலகம் முழுவதுமே கேட்கிறது. இந்நன்னாளில், நாட்டு மக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ராமரின் பக்தர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூடாரத்தில் வாழ்ந்து வரும் ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவிலான ராமர் சிலை) மிகப் பிரம்மாண்டமான கோயில் கட்டப்படும்.

பல நூற்றாண்டுகளாக சிக்கி தவித்த ராமர் பிறந்த இடத்திற்கு விடுதலை கிடைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கன்னியாகுமரியிலிருந்து ஷீர்பவானி வரை, கோடீஸ்வர் முதல் கமக்யா வரை, ஜெகநாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காசி விஸ்வநாத் வரை, நாடு முழுவதும் ராம நாமத்தில் மூழ்கியுள்ளனர்.

நமது பாரம்பரியத்தின் நவீன அடையாளமாக ராமர் கோயில் விளங்கும். தேச உணர்வு, பக்தி ஆகியவற்றின் அடையாளமாக அது அமையும். கோடிக்கணக்கான மக்கள் விருப்பத்தின் சின்னமாகவும், ராமர் கோயில் இருக்கும். எதிர்கால தலைமுறையினருக்கு அது தொடர்ந்து ஊக்கமளிக்கும். அனைவரின் இதயமும் மிளிர்ந்துள்ளது. நாடே உணர்ச்சி வயப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கூடாரத்தில் இருக்கும் ராம லல்லாவுக்கு சிறப்பான கோயில் கட்டப்படும். கோயில் கட்டப்படுவதன் மூலம் வரலாறு படைக்கப்படவில்லை, மீண்டும் எழுதப்பட்டுள்ளது. பழங்குடியினரின் படகோட்டி ராமருக்கு உதவியது போல், கோவர்த்தன மலையை கிருஷ்ணர் தூக்குவதற்கு குழந்தைகள் உதவியது போல் அனைவரின் முயற்சியால் கோயில் கட்டப்படும்.

இந்திய கலாசாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை ராமர் கோயில் எடுத்துரைக்கும். உலகம் அழியும் வரை ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் கோயில் ஊக்கமாக அமையும். எப்போது எல்லாம் மனித இனம், ராமரின் மீது நம்பிக்கை வைத்ததோ. அப்போதெல்லாம் முன்னேற்றம் அடைந்தோம். அனைவருக்குமான வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: தகவல்கள் உடனுக்குடன்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.