ETV Bharat / bharat

தமன் 1 வென்டிலேட்டர்களை வாங்க ஆர்வம் காட்டும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்

author img

By

Published : May 21, 2020, 1:58 PM IST

Nitin Patel
Nitin Patel

காந்தி நகர்: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் தமன் 1 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர்களை வழங்கியுள்ளதாக குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் சுமார் மூன்று விழுக்காட்டினருக்கு வென்டிலேட்டர்களின் உதவிகள் தேவைப்படும். ஆனால், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் தேவையான அளவு வென்டிலேட்டர்கள் இல்லை.

குறிப்பாக, குஜராத் மாநிலம் போதிய அளவு வென்டிலேட்டர்கள் இல்லாமல் கடும் இன்னல்களை எதிர்கொண்டது. அப்போது ராஜ்காட்டில் அமைந்துள்ள ஜோதி நிறுவனம் 866 வென்டிலேட்டர்களை குஜராத் அரசுக்கு வழங்கி உதவியது.

இருப்பினும், ஜோதி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வென்டிலேட்டர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க உகந்தது அல்ல என்று அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவக் குழு குஜராத் மாநில முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியது.

குஜராத் அரசு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெறாத வென்டிலேட்டர்களை வாங்கி பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடுகிறது என்று குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அமித் சவ்தா விமர்சித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த குஜராத் மாநிலத்தின் சுகாதாரத் துறைச் செயலர் ஜெயந்தி ரவி, "வென்டிலேட்டர்கள் என்பது மருந்துகள் அல்ல. எனவே, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சான்றிதழ் பெறத் தேவையில்லை" என்று பதிலளித்தார்,

இந்நிலையில், இந்த தமன் 1 வென்டிலேட்டர்களை இன்று காலை பரிசோதித்த குஜராத் அரசின் வல்லுநர்கள் குழு, அவற்றை கோவிட்-19 மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளது.

இதுதொடர்பாக குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் கூறுகையில், "பாஜக ஆட்சியில் இல்லாத மகாராஷ்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களும் தமன் 1 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர்களை வழங்கியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருக்கும் இதுபோன்ற மருத்துவக் கருவிகளை அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.