ETV Bharat / bharat

விற்பனையில் அசத்தும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட முகக் கவசங்கள்...!

author img

By

Published : Jul 11, 2020, 1:25 PM IST

jewellery-shop-in-surat-selling-diamond-studded-masks-worth-lakhs
jewellery-shop-in-surat-selling-diamond-studded-masks-worth-lakhs

காந்திநகர்: சூரத்திலுள்ள நகைக் கடை ஒன்றில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு அனைவரிடத்திலும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிதீவிரமாகப் பரவிவருவதையடுத்து, அனைவரும் வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக் கவசங்கள் அணியவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துவருகின்றன. மத்திய அரசு கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு அத்தியாவசிய பொருள்களின் பட்டியலிலும் முகக் கவசங்களை இணைத்தது.

பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட நபர்களுடன் நடைபெற அனுமதிக்கப்பட்டதையடுத்து அலங்கரிக்கப்பட்ட முகக் கவசங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு கிடைத்தது. தற்போது, வெள்ளி, தங்கத்தினால் ஆன முகக் கவசங்களும் புலக்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளரான தீபக் சோக்ஷி, ஊரடங்கால் இழந்த வருவாயை மீட்க ஏதேனும் புதுவித யுக்தியுடன் வியாபாரத்தை தொடங்கவேண்டும் என எண்ணியுள்ளார். இதற்கிடையில், இவரது கடைக்கு வந்த சில வாடிக்கையாளர்கள் மணப்பெண், மணமகனுக்கு வித்தியாசமான முறையில் முகக் கவசங்கள் செய்து தருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து, தீபக் தங்கத்துடன் அமெரிக்க வைரத்தையும், சுத்தமான வைரத்தையும் இணைத்து முகக் கவசம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு முகக் கவசம் செய்வதற்கு 1.5 லட்சம் ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்கிறார்.

இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "குடும்பத்தாரின் திருமணத்திற்காக நகைகள் வாங்க கடைக்கு வந்தேன். அங்கு வைரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள முகக் கவசம் என்னை ஈர்த்தது" என்றார். இந்த ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து பலர் வாடிக்கொண்டிருக்கையில், ஒருபுறம் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட முகக் கவசங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.