ETV Bharat / bharat

'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' வலைதளத்தின் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப்பதிவு !

author img

By

Published : Oct 6, 2020, 4:04 PM IST

லக்னோ : 'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' என்ற வலைதளத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாக உத்தரப் பிரதேச காவல் துறையினர் வழக்கொன்றை பதிவுசெய்துள்ளனர்.

' ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' வலைத்தளத்தின் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்கு பதிவு !
' ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' வலைத்தளத்தின் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்கு பதிவு !

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆள் ஆரவரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அப்பெண்ணை சிலர் மீட்டனர்.

பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் செப்.29ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் கூட ஒப்படைக்காமல் செப். 29ஆம் தேதி நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்களை வெடிக்கச் செய்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டங்களை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் 'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' என்ற வலைதளம் சிலரால் உருவாக்கப்பட்டது. வழக்குத் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுவந்தன.

இதனிடையே, சட்ட ஒழுங்கை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டும் வகையில் குற்றச் சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி அந்த வலைதளத்தின் மீது ஹத்ராஸ் காவல் துறையினர் வழக்கு ஒன்றை இன்று பதிவுசெய்துள்ளனர்.

அத்துடன், வலைதளத்துடன் தொடர்புடைய 19 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் "வன்முறையைத் தூண்டும்" வகையில் கருத்துகளைப் பதிவிட்டதற்காக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கூறிய ஹத்ராஸ் காவல் துறையினர், "ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி மாநிலத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி திட்டத்தை 'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' வலைதளத்துடன் தொடர்புடையவர்கள் திட்டிவருகின்றனர்.

அதற்காக நிதி திரட்டும் வேலை 'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' மூலம் செய்துவருகின்றனர் என அறியப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசை வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து வீழ்த்த ஒரு சூழ்ச்சி நடந்துவருகிறது" எனக் கூறினர்.

நிதித் திரட்டல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது இந்த வழக்கு குறித்த தகவல்களை அமலாக்க இயக்குநரகம் ஆராய்ந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறையினர் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டால், 'ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ்' என்ற வலைதளத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது பணமதிப்பிழப்பு தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் பணமோசடி வழக்கு பதிவுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.