ETV Bharat / bharat

சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவுக்கு நிபந்தனை பிணை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்!

author img

By

Published : Dec 4, 2020, 5:15 PM IST

டெல்லி: சீன புலனாய்வு அமைப்புகளுக்கு நாட்டின் தகவல்களை ரகசியமாக பரிமாறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.

HC grants bail to journalist Rajeev Sharma in espionage case
சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது!

சீனாவுக்காக இந்தியாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் கடந்த செப். 14ஆம் தேதியன்று டெல்லியை அடுத்துள்ள பிதாம்புராவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மா (61) என்பவரை டெல்லி சிறப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர். நாட்டின் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவருடன் இணைந்து பணியாற்றிவந்த சீனாவைச் சேர்ந்த கிங் ஷி, நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர் சிங் ஆகியோரையும் காவல் துறை கைதுசெய்தது.

பிதாம்புரா பகுதியில் அமைந்துள்ள சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையில், ​மின்னாக்கம் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்புத் தொடர்பான சில ரகசிய ஆவணங்கள், கோப்புகள், மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ரகசியத் தகவல்களை சீனாவுக்கு பணத்திற்காக அளித்துவந்ததற்கான சில ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மா பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அம்மனுவில், “இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பாவ்ர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை இன்னும் தாக்கல்செய்யவில்லை. கைதுசெய்யப்பட்ட 60 நாள்களுக்கு மேலான நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை. எனது வயதையும் உடல்நலனையும் கருத்தில்கொண்டு எனக்குப் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

HC grants bail to journalist Rajeev Sharma in espionage case
சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது!

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “டெல்லி பாட்டியாலா ஹவுஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டவிரோதமானது. அதேபோல, இவ்வழக்கில் 90 நாள்களுக்குள் காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்யலாம். மனுதாரருக்கு பிணை பெறும் உரிமை உண்டு. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சொந்த பத்திரப் பிணையில் நிபந்தனை பிணை வழங்கலாம்” என உத்தரவிட்டது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலால் நிறுவப்பட்டு தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தலைமையில் இயங்கிவரும் விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் என்னும் அமைப்பின் தலைமைச் செய்தி ஆசிரியராக ராஜீவ் ஷர்மா பணியாற்றிவந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : தங்கக் கடத்தல் வழக்கு: சி.எம். ரவீந்திரனுக்கு மூன்றாவது அழைப்பாணை அனுப்பிய அமலாக்க இயக்குநரகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.