ETV Bharat / bharat

ஹத்ராஸ் கொடூரம்: சமூக விடுதலையை தலித்துகள் இன்னும் பெறவில்லை என்பதை காட்டுகிறது!

author img

By

Published : Oct 3, 2020, 3:50 PM IST

ஹத்ராஸ் கொடூரம்: சமூக விடுதலையை தலித்துகள் இன்னும் பெறவில்லை என்பதை காட்டுகிறது!
ஹத்ராஸ் கொடூரம்: சமூக விடுதலையை தலித்துகள் இன்னும் பெறவில்லை என்பதை காட்டுகிறது!

இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் இன்னும் தங்களது சமூக விடுதலையைப் பெற முடியாமல் தவித்துவருகின்றனர் என, காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே வேதனை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் இன்னும் தங்களது சமூக விடுதலையைப் பெற முடியாமல் தவித்துவருகின்றனர் என, காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே வேதனை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், காங்கிரஸ் பவனில் தேச தந்தை மகாத்மா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் விழா நேற்று (அக்.2) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மல்லிகார்ஜூனா கார்கே கலந்துகொண்டு இரு தலைவர்களின் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " விவசாயத்தை நமது நாட்டின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள். அந்த முதுகெலும்பை உடைக்கும் வேலையை மத்திய அரசு செய்துவருகிறது. "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என மேடைதோறும் முழங்கிய பிரதமர் மோடி உண்மையில் "மாரோ ஜவான், மாரோ கிசான்" என்ற வகையிலேயே ஆட்சி நடத்திவருகிறார்.

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, விவசாயிகளை விவசாயத்தை படுகொலை செய்துவருகிறார். பண மதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் முனைவோர்களின் வாழ்வை அழித்த ஜி.எஸ்.டி, தற்போது மூன்று புதிய வேளாண் சட்டங்கள் என கொண்டுவந்து, தனது தவறான கொள்கைகளால் நாட்டை அழிவுப் பாதைக்குள் கொண்டு செல்கிறார்.

பிரதமர் மோடி, நம் நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர் சம்பரன் சத்தியாக்கிரகம் போராட்டத்தையாவது வாசிக்க வேண்டும். இந்த சத்தியாக்கிரகத்தில், மகாத்மா காந்தியின் பின்னால் நின்ற விவசாயிகள்தான் முழு சுதந்திரப் போராட்டத்தின் முகத்தையும் மாற்றியமைத்தது. நமது நாட்டில் தலித்துகளுக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் அவர்கள் இன்னும் சமூக விடுதலையைப் பெறுவதில் இருந்து வெகு தொலைவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நம் கண்ணெதிரே நடந்துவரும் உத்தரப் பிரதேச கொடூரங்கள், அதற்கு நிதர்சன சாட்சிகளாகும். தலித்துகள் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை அனைவரும் இப்போதாவது உணர வேண்டும்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்லும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை உத்தரப் பிரதேச காவல்துறை எவ்வாறு இப்படி கையாள்கிறது என தெரியவில்லை. நடப்பது 100 விழுக்காடு ஜனநாயக விரோத கூட்டாட்சி என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.