ETV Bharat / bharat

பிகார் தேர்தலில் ஆட்ட நாயகனாக உருவெடுத்துள்ள தேஜஷ்வி - ரவுத் புகழாரம்

author img

By

Published : Nov 11, 2020, 8:22 PM IST

பிகார் தேர்தலில் ஆட்ட நாயகனாக உருவெடுத்துள்ள தேஜஷ்வி - ரவுத் புகழாரம் !
பிகார் தேர்தலில் ஆட்ட நாயகனாக உருவெடுத்துள்ள தேஜஷ்வி - ரவுத் புகழாரம் !

மும்பை : பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்ட நாயகனாக உருவெடுத்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஷ்வி பிரசாத் யாதவ் 2024 மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பாரென சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்குமான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ - என்டிஏ கூட்டணி பிகாரில் 125 இடங்களில் வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஜே.பி.யின் வாக்கு வங்கி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதே வேளையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், "பாஜக-ஜே.டி.யூ. கூட்டணியின் பெரும்பான்மை மிகவும் பலவீனமான ஒன்றாகவே உள்ளது. அங்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சியான ஜே.டி.யூ. மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு முறைக்கு மேலாக ஆட்சியைக் கைப்பற்றிய அவரது கட்சி, இந்த மோசமான நிலையை வெற்றியாகக் கொண்டாடினால் அதை நகைச்சுவையாகவே கருத வேண்டும். பாஜக சிறப்பாகச் செயல்பட்டது, அதற்காக அது நிறைய அரசியல் யுக்திகளை கைக்கொண்டது.

சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி. ஏறத்தாழ ஜேடியூவின் வேட்பாளர்களில் இருபது பேரின் தோல்வியை உறுதிசெய்தது. பாஸ்வான் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. இது ஒரு தீவிரமான பிரச்னை.

பிகாரில் அமையவுள்ள புதிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு யாராலும் உறுதியளிக்க முடியாது.

நிதிஷ் குமாரின் சிறகுகளை பாஜக உடைத்துவிட்டது. அதையும் மீறி நிதிஷ்குமார் செயல்படத் துடித்தால் அது சிராக் பாஸ்வானை அவருக்கு எதிராக காய் நகர்த்த வைக்கும்.

தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக ஆக முடியாவிட்டாலும், அவர் ஆட்ட நாயகனாக உருவெடுத்துள்ளார். நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஷ்வி போன்ற மிகவும் நம்பிக்கைக்குரிய முகத்தை மக்கள் கண்டடைந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எதிரான பெரும் அரசியல் போராட்டத்தை நடத்திய தேஜஷ்விக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அடுத்த மக்களவைத் தேர்தலில் தேஜஷ்வி முக்கியப் பங்கு வகிப்பார். அவரின் போராட்டம் வெற்றிபெற்றிருக்கிறது. இளைஞர்கள் உத்வேகம் பெற்றுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.