ETV Bharat / bharat

2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: சாதனை படைக்கும் கருத்துக்கணிப்பு

author img

By

Published : Nov 10, 2020, 9:22 AM IST

பிகார்: 2020ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பல சாதனைகளை நிகழ்த்தி தனித்துவம் பெற்றுள்ளது. பல வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட பிகார் தேர்தல் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைக் காண்போம்.

election
election

கரோனா காலத்தில் முதல் தேர்தல்: கரோனா பெருந்தொற்று காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவின் முதல்மாநிலமாக பிகார் விளங்குகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் பதாகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை காற்றோட்டமான அரங்குகளில் சேமித்து வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வாக்குப்பதிவு நடைபெறும் வளாகங்கள் ஒருநாளுக்கு முன்பே சுத்திகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. பாரா-ஹெல்த் அல்லது ஆஷா (ASHA) தொழிலாளர்கள் வாக்காளர்களை வெப்ப பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல்: கரோனா போன்ற கடினமான சூழலில் தேர்தலில் போட்டியிடும் அனைத்துப் போட்டியாளர்களும் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குகளை சேகரிப்பதை விட, ஆன்லைன் மூலம் வாக்கு சேகரிக்கத் தொடங்கினர். தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வேட்பாளர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பாளர் ஒருவர் தனது வேட்புமனுவை நேரடியாக தாக்கல் செய்ய விரும்பினால், இரண்டு நபர்கள் மட்டுமே அவருடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாகக் கட்டுப்படுத்தப்பட்டது. 80 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் தபால் வாக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்தியது. இந்த விருப்பம் கரோனா நோயாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்.

பிகார் அரசியலில் மையம் கொண்ட பெண்: பிகார் அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அரசியல் என்ட்ரி கொடுத்தவர், புஷ்பம் பிரியா சவுத்ரி. இவர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த வினோத் குமார் சவுத்ரியின் மகள் ஆவார். லண்டன் வாழ் பிகார் மாநிலத்தவரான புஷ்பம் பிரியா சவுத்ரி, லண்டனில் பொருளாதாரப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

'புளூரல்ஸ்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய அவர், அந்தக் கட்சியின் 'முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்' என அறிமுகம் செய்து கொண்டார். இவரது வருகை நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. அடுத்த பத்தாண்டுகளில் பிகாரை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என அவர் அறிவித்துள்ளார்.

லாலு பிரசாத் இல்லாத முதல் தேர்தல்: கடந்த 40 ஆண்டுகால அரசியலில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பரப்புரை இல்லாத தேர்தல் இது. முன்னதாக இவர் 2017ஆம் ஆண்டு முதல் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அதேபோன்று ராம்விலாஸ் பாஸ்வான், ரகுவன்ஷ் பிரசாத் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதிகள் இல்லாத தேர்தலை பிகார் சந்தித்துள்ளது.

முக்கியத்துவம் பெறும் தேர்தல் வாக்குறுதிகள்: பாஜக, லாலு பிரசாத் யாத்வ் நிறுவிய ராஷ்டிரிய ஜனதா தளம், ராம் விலாஸ் பஸ்வான் நிறுவிய லோக் ஜனசக்தி போன்ற முக்கிய கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் தகுதியை உயர்த்துதல் போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளன. பிகார் அரசியல் சாதி சார்ந்ததாகும் என்பது ரகசியமல்ல. ராஷ்டிரிய ஜனதா தளம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளைத் தருவதாக உறுதியளித்தாலும், பாஜக 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளது.

பிகாரில் அடுத்த முதல்வர் யார்
பிகாரில் அடுத்த முதல்வர் யார்

லோக் ஜனசக்தி கட்சி 'பிகார் முதல் பிஹாரி முதல்' என்ற பார்வை ஆவணத்தையும் முன்வைத்து, இளைஞர்களின் மேம்பாடு மற்றும் சுகாதார, கல்வி வசதிகளை மேம்படுத்துவதாக உறுதியளித்தது.

இலவச கரோனா தடுப்பூசி போடுவதாக பாஜக வாக்குறுதி: பிகார் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி என்று மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் வாக்குறுதி அளித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து கரோனாவைக் காரணம் காட்டி, வாக்குறுதி அளிப்பது பாஜகவின் விரக்தியைக் காட்டுகிறது என விமர்சித்தனர்.

இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், அனைத்து நிலைகளையும் தாண்டிய பிறகு, குறைந்தது மூன்று தடுப்பூசிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. அவை உற்பத்தியில் உள்ளன. இந்த தடுப்பூசி நன்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தால், உற்பத்தி நடைபெறலாம். நமது தடுப்பூசி உற்பத்தி திறன் மிகப்பெரியது எனத் தெரிவித்தார்.

இளம் வயது முதலமைச்சர் தேஜஸ்வி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றால் இந்தியாவில், முதல் இளம் வயது முதலமைச்சர் என்ற பெருமையை தேஜஸ்வி யாதவ் பெறுவார். தேஜஸ்விக்கு தற்போது 31 வயது ஆகிறது.

பிகார் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 1968ஆம் ஆண்டு சதீஷ் பிரசாத் 32 வயதில் முதலமைச்சர் பதவியையும், 1975ஆம் ஆண்டு ஜெகநாத் மிஸ்ரா தனது 38 வயதிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

குடும்ப அரசியல்: 2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகாகத்பந்தனுக்கு வந்த கருத்துக் கணிப்புகள் அதிக பெரும்பான்மையைக் கொடுத்துள்ளன. இக்கூட்டணி 139 முதல் 161 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகார் முதலமைச்சராக தேஜஷ்வி யாதவை தேர்வு செய்தால், முதல் முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது உறுப்பினர் இந்தியாவில் முதலமைச்சர் பதவியை வகிப்பார்.

லாலு பிரசாத் யாதவ் 1990ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இருப்பினும், 1997ஆம் ஆண்டு வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்தார். ரப்ரி தேவி 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை மூன்று முறை பிகார் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதையும் படிங்க: உடனுக்குடன்: பிகார் சட்டப்பேரவை முடிவுகள் 2020

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.