ETV Bharat / bharat

வேளாண் உற்பத்தியாளர்களை பலப்படுத்த வேளாண் உள்கட்டமைப்பு நிதி!

author img

By

Published : Sep 2, 2020, 10:35 PM IST

agri
agri

பலவீனமாக உள்ள வேளாண் விநியோக சங்கிலித் தொடரை பலப்படுத்தும் முதலீடுகளைக் கவர்வதுதான் இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் நோக்கம் என வேளாண் துறை நிபுணர் பரிதலா புருஷோத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லி: கடந்த ஆகஸ்ட் 9, 2020 அன்று பிரதமர் ரூ.1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார், இந்த நிதியின் மூலம் அறுவடைக்கு பின் சேமிப்பகம் மற்றும் செயலாக்க வசதிகளை உருவாக்கவும், வேளாண் உற்பத்தி கூட்டமைப்புகளை (எஃ.ப்.பி.ஓ.) உறுதிப்படுத்தவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எஃப்பிஓ மற்றும் பிற தொழில்முனைவோர்க்கு முதன்மை வேளாண் கடன் சொசைட்டிக்கள் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன்கள் வழங்குவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அறுவடைக்கு பிந்தைய நிர்வாகத்திற்கான குறிப்பிட்ட கால கடன்களுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு செய்யப்படும், அதற்கான செலவினத்தை மத்திய அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கடன் பயனாளிகளால் திருப்பிச் செலுத்த இயலாத 2 கோடி வரையிலான கடன்களுக்கு மத்திய அரசு உத்தரவாதமளிக்கிறது. 2 கோடி வரையிலான நிதியானது கடன் உத்தரவாத நிதி மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும், இந்த உத்தரவாதத்திற்கான கட்டணத்தையும் அரசே செலுத்தும்.

பலவீனமாக உள்ள வேளாண் விநியோக சங்கிலித் தொடரை பலப்படுத்தும் முதலீடுகளைக் கவர்வது தான் இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் கிடங்குகள், தீவன சேமிப்பகங்கள், மூட்டை கட்டும் கிடங்குகள், தரம் பிரிக்கும் இடங்கள், பதப்படுத்தும் கிடங்குகள், பழுக்க வைக்கும் கிடங்குகள், மின் – மார்க்கெட்டிங் தளங்கள் ஆகிய பிரிவுகளுக்கு, 3 சதவீத வட்டிவிகித உதவி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சந்தைகளை மேம்படுத்தும் மிக முக்கிய முன்னெடுப்பாக இந்த நிதி நடவடிக்கை பார்க்கப்படுகிறது. சுதந்திரமான வேளாண் செயல்பாடுகளுக்காக இதற்கு மூன்று முக்கிய அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. இந்த அவசரச் சட்டங்களும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் திருத்தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே தங்களது உற்பத்திப் பொருளை விற்பனை செய்ய முடியும், அத்துடன் விவசாயிகள், செயலாக்கம் செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சில்லறை வணிகர்களை ஒருங்கிணைக்க முடியும். சட்டப்பூர்வ கட்டமைப்பை உருவாக்குவது, வேளாண் சந்தைகளை முறைப்படுத்துவதற்கு அவசியமான ஒன்று, ஆனால் இது போதாது.

அறுவடைக்கு பிந்தைய உள்கட்டமைப்பை உருவாக்குவதைப் போல, சட்டப்பூர்வ கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வதும் மிக முக்கியமானது. இந்த இடைவெளியை வேளாண் உள்கட்டமைப்பு நிதி நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தளவுக்கு வேகமாக, ஆர்வத்துடன் மாநிலங்களும் எஃப்பிஓக்களும், தனிப்பட்ட தொழில்முனைவோரும் மத்திய அரசின் இந்த மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துகின்றனரோ, அந்தளவுக்கு தாக்கம் அதிகளவு இருக்கும்.

10,000 அளவுக்கு எஃப்பிஓக்களை உருவாக்கும் பொறுப்பு நபார்டு வங்கிக்கும் இருப்பதால், நியாயமான விலைகளைக் கொண்ட விற்பனையகங்களை உருவாக்க வகை செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆனால் சில முக்கிய அம்சங்கள் இல்லாதது குறையாகவே உள்ளது. அறுவடைக்கு பின் ஏராளமான செயல்முறைகளால் விவசாயிகளுக்கான விலை குறைவாகவே உள்ளது, எனவே இந்த கூடுதல் சேமிப்பக வசதிகள் அவர்களது சுமைகளைக் குறைத்து மிகப் பெரிய பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் சிறிய விவசாயிகளால் இந்த சேமிப்பகங்களைப் பயன்படுத்தி சேமிக்க இயலாது, ஏனென்றால் அவர்களது குடும்பத் தேவைகள், அத்தியாவசியச் செலவுகளுக்காக உடனடியாக பணம் தேவைப்படுவதால், விளைபொருட்களை உடனே விற்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

நெகிழ்தன்மை கொண்ட கிடங்கு ரசீது முறை மூலம் எஃப்பிஓ அளவிலான சேமிப்பக வசதிகளின் மதிப்பை பெரிதாக்க வேண்டும்: விவசாயிகளுக்கு எஃப்பிஓக்கள் முன்தொகை கொடுக்கலாம், அதாவது தற்போதுள்ள சந்தை விலையின் படி அவர்களது பொருட்களின் மதிப்பில் 75-80 சதவீத தொகையை அளிக்கலாம்.

ஆனால் இந்த முன் தொகை அளிப்பிற்காக எஃப்பிஓக்களிடம் அதிகளவு செயலாக்க முதலீடு இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதைப் போல, எஃப்பிஓக்களுக்கு 4 முதல் 7 சதவீதம் வரைக்கும் செயலக்க முதலீட்டுக்கான நிதியை நபார்டு வழங்க வேண்டும்.

அப்படி வழங்காதவரை, சேமிப்பக வசதிகளை பெருக்குவதால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. தற்போது தங்களது செயலாக்க முதலீட்டிற்காக நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து 18-22 சதவீத ஆண்டு வட்டியுடன் எஃப்பிஓக்கள் கடன் வாங்குகின்றனர். இதுபோன்ற அதிக்கப்படியான வட்டிவிகிங்களால், அவர்கள் பொருளாதாரச் சுமையுடன் இருப்புகளை சேமிக்கும் நிலை உருவாகியுள்ளது, எனவே அறுவடை நேரங்களில் அவர்களது சுமைகளைக் குறைக்கும் விதமாக விகிதங்கள் இருக்க வேண்டும்.

எஃப்பிஓக்களின் சந்தை அபாயங்களைக் குறைக்கக் கூடிய நெகிழ்தன்மை கொண்ட கிடங்கு ரசீது முறை குறித்து, அவர்களுக்கு கண்டிப்பாக நபார்டு சொல்லித்தர வேண்டும்.

அடுத்ததாக பொருட்களுக்கான விலைக்குறியீடு சந்தைகளில் ஈடுபட்டுள்ள அரசு ஏஜென்சிகள், இந்திய உணவுக் கழகம், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு மார்க்கெட்டிங் கூட்டமைப்பு, மாநில வர்த்தக கழகம் ஆகியவை வேளாண் துறையில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். சீனா இந்த வழியில் தான் தனது வேளாண் எதிர்கால சந்தைகளை கட்டமைத்துள்ளது.

மூன்றாவதாக, வேளாண் சந்தைகளை ஆரோக்கியமானதாக மாற்ற, எஃப்பிஓ மற்றும் மற்றும் வர்த்தகர்களுக்கு கடன்களை வழங்கும் வங்கிகள், ‘மறு-காப்பீட்டாளர்களாக’ மாறி பொருட்கள் விலைக்குறியீட்டில் பங்குகொள்ள வேண்டும்.

இறுதியாக, அரசு கொள்கையானது நிலையாகவும், சந்தைக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அதிக கட்டுப்பாடுகளுடன் கணிக்க முடியாத அளவிலும் இருந்தது. அவ்வப்போது உயரும் வேளாண் தயாரிப்புகளால், வேளாண் எதிர்கால சந்தைகளை முடக்கும் நிலை ஏற்பட்டது. இந்திய அரசின் அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள், வேளாண் எதிர்கால சந்தையை யூக வணிகர்களின் கூடாரமாகவே பார்த்தனர். அசாதாரணமாக விலை ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு இந்த சந்தைகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், இந்த சந்தைகள் தான் விலை கண்டறியும் முக்கியக் கருவிகள் என்று ஆட்சியாளர்கள் உணரவே இல்லை. வேளாண் எதிர்கால சந்தைகளை முடக்குவது/நிறுத்துவது என்பது, விலை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும் தூதரை கொல்வதற்கு சமம். இதனால் பல்வேறு தருணங்களில் இருட்டில் தங்கள் மீதே கல்லெறிந்து கொள்வது போல, ஆட்சியாளர்களின் கொள்கைகள் அவர்களையே பதம் பார்த்துள்ளது.

வேளாண் சந்தைகளை ஒருமுகப்படுத்துவது (ஒரே நாடு ஒரே சந்தை) மட்டும் முக்கியமல்ல. அவர்களது தேவைகளை எதிர்கால சந்தைகள் மூலம் கணித்து, அதன் மூலம் விவசாயிகள் நஷ்டமடையாமல் அவர்களது விளைபொருட்களுக்கு ஏற்ற சரியான விலையை உறுதிசெய்து, விவசாயிகளின் சுமையை குறைக்க முடியும்.

தற்போது சிறிய விவசாயிகளின் சந்தைப்படுத்தல் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான குழுக்களை உருவாக்கம் செய்து, இந்த குழுக்களை ஒருங்கிணைத்து சந்தைச் சங்கிலித் தொடரை உறுதி செய்து அவர்களுக்கான சந்தையை விரிவாக்க முடியும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏஜென்சிகளால் இது வரை 7000 வேளாண் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளிள் நிலைத்தன்மையை உறுதிசெய்தல்

ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு என்ற குறிக்கோளின் கீழ், 10,000 புதிய எஃப்பிஓக்களை மேம்படுத்துவதற்கான செயலாக்க விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுதியான குழுக்களை உருவாக்குவதற்கு சில நெறிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். சிறு விவசாயிகளின் வேளாண் வர்த்தக கூட்டுச்சங்கத்தில் நிதித் தொகுப்பை உருவாக்குவதோடு, நபார்டு மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் உத்தரவாத நிதிகளை உருவாக்குவது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். எஃப்பிஓக்களுக்கான மார்க்கெட்டிங் பண்ணை அளவில் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, வேளாண்-சந்தை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் உள்ள எஃப்பிஓக்களுக்காக மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் மீதான சுரண்டலைத் தடுப்பதற்காக சில முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நியாயமான விலைகளும், தரமான வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.

இதற்காக கையிலெடுக்க வேண்டிய 3 முக்கியமான வேளாண் தொழில்நுட்பங்கள்:

ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு): மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மத்தியபிரதேச விவசாயிகள் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பயிர் வளர்ச்சியை மேம்படுத்த பழகியுள்ளனர். வேளாண் துறைக்கான ரோபோக்கள் மூலம் நிலத்தின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது, அத்துடன் இந்த ரோபோக்கள் அறுவடைக்கு உதவி செய்கின்றன. வானிலை மாற்றங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் பணிகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்கின்றனர்.

ஆளில்லா ட்ராக்டர்கள்: ஜிபிஎஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ட்ராக்டர்களை ஆளில்லாமல் இயக்கலாம். நிலத்தில் மெதுவாக இயங்கக் கூடிய இவ்வகை ட்ராக்டர்கள், முன்கூட்டியே ப்ரோகிராம் செய்தது போல நீள, அகலங்களில் நிலத்தை உழுகிறது. அத்துடன் வேளாண் பணிகளை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

அமுல் டைரி (நாட்டின் மிகப் பெரிய எஃப்பிஓ) தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக மாடுகளில் செயற்கை கருத்தரிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் (அமுல் டைரி) வெற்றிகரமாக சோதனை செய்து முடித்த பின், அமுல் பால் கொட்டார பகுதியைச் சேர்ந்த 1200 கிராம அளவிலான பால் உற்பத்தியாளர்களும் இப்போது டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாறியுள்ளனர்.

பால் உற்பத்தி உறுப்பினர் தனது மாட்டிற்கு செயற்கை கருத்தரித்தல் வேண்டுமென்று பதிவு செய்து விட்டால், அவரது மாடுகளுக்கு கருத்தரிப்பு செயலாக்கங்கள் நடைபெறும். அந்த நேரத்தில் உடனுக்குடன் உற்பத்தியாளரின் மொபைல் ஃபோனுக்கு செய்திகள் செல்லும்.

செயற்கை கருத்தரிப்பு செய்யும் தொழில்நுட்ப நிபுணர் மூலம் பால் உற்பத்தியாளருக்கு மொபைலில் தகவல் அனுப்பப்படும். அதன் பின் நிபுணர் தனது பணிகளை முடித்த பின் தனது அறிக்கையை அமுல் கால் சென்டருக்கும், பால் உற்பத்தியாளருக்கும் அனுப்பி விடுவார்.

மாடு கருவுற்ற பிறகு ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாட்டின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு அந்த தகவல்கள் சேகரிக்கப்படும். 9 மாதங்கள் ஆன பின் பிரவத்திற்கான வேலைகள் மேற்கொள்ளப்படும். கன்றுக்குட்டி பிறந்ததும், அதன் மொத்த தகவல்களும் டிஜிட்டல் பதிவேடுகள் மூலம் பதியப்பட்டு, பால் உற்பத்தியாளரிடம் அளிக்கப்படும்.

தனது பண்ணையில் உள்ள அத்தனை மாடுகளின் தகவல்களையும் உற்பத்தியாளர் டிஜிட்டல் முறையில் பெற முடியும். இந்தப் பணிகளை சாஃப்ட்வேர் அப்ளிகேஷன் மூலம் அமுல் டைரி நிர்வகிக்கிறது. பின்னாளில் அந்த பண்ணையில் உள்ள மாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்வதற்கு ஏதுவாக, மொபைல் அப்ளிகேஷனும் உருவாக்கப்படுகிறது. மாட்டின் உடல் நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உற்பத்தியாளர் எளிதில் மொபைலில் பெற முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.