ETV Bharat / bharat

கரை ஒதுங்கிய குட்டி நீலத்திமிங்கலம்: தொட்டுப் பார்த்து பிரமித்த மீனவ மக்கள்!

author img

By

Published : Jul 28, 2023, 8:53 PM IST

Etv Bharat
Etv Bharat

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ஆந்திராவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில் ஸ்ரீகாகுளம் கடற்கரையில் நீலத்திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.

ஆந்திரா: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. ஆந்திராவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் மக்கள் மழையின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மழை சற்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், ''மழை குறைந்துள்ளது. ஆனால், வெள்ளப்பெருக்கு இதுவரை குறையவில்லை. படிப்படியாக குறையும்'' என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வெள்ளத்தில் தத்தளித்து வரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம், சந்தபொம்மாலி அடுத்த பழைய மேகவரம் மற்றும் மருவாடா கடற்கரை பகுதிக்கு இடையே நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வெற்றியை எதிர்த்த வழக்கு - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சுமார் 24 அடி உயரமும், மூன்றரை டன் எடையும் கொண்ட அந்த திமிங்கலத்தை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் தொட்டு பார்த்து ஆச்சரியப்பட்டனர். கடலில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக அந்த திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகளும், மீனவ மக்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

ஒரு முதிர்ந்த நீலத் திமிங்கலம் அதன் தலை முதல் வால் வரை 75 அடி முதல் 100 அடி வரை இருக்கும். இதன் எடை சுமார் 190 டன்கள் வரை இருக்கலாம். அந்த வகையில் உயிரிழந்த இந்த நீலத்திமிங்கலத்தின் எடை மூன்றரை டன் எடை மட்டுமே உள்ள நிலையில் இது குழந்தை நீலத்திமிங்கலமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்த இந்த நீலத்திமிங்கலத்தை அதிகாரிகள் மீட்டு, அதன் இறப்புக்கான காரணத்தை ஆய்வு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க கடல் வெப்பமயமாதல் காரணமாக, காலநிலை மாற்றம் ஏற்பட்டு அதீத மழை மற்றும் வறட்சி காரணமாக மனித குலம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் கடல் வாழ் உயிரினங்களும் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக திமிங்கலம், கடல் வாழ் அரிய உயிரினங்கள் என அனைத்தும் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி இருக்க ஆந்திராவில் குட்டி நீலத்திமிங்கலம் உயிரிழந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு: காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.