ETV Bharat / bharat

காங்கிரஸ் தேர்தல் செயல்பாட்டு குழுவில் அதிமுக முன்னாள் ஆலோசகர் - 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமா?

author img

By

Published : May 24, 2022, 11:04 PM IST

காங்கிரஸ்
காங்கிரஸ்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக அரசியல் விவகாரங்கள் குழு , தேர்தல் செயற்பாட்டுக் குழு, யாத்திரைக் குழு என 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இதில் கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் ஆலோசகராக செயல்பட்ட சுனில் கனுகோலுவும் இடம் பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 குழுக்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

அரசியல் விவகாரங்கள் குழு , தேர்தல் செயற்பாட்டு குழு , பாரத் ஜோடா யாத்திரை திட்டமிடல் குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல் விவகாரங்களுக்கான குழுவுக்கு ராகுல் காந்தி தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி , திக் விஜய் சிங் , வேணுகோபால் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான செயற்பாட்டு குழுவில் பிரியங்கா காந்தி , ஜெய்ராம் ரமேஷ் , அஜய் மக்கான் , ரன்தீப் சுர்ஜ்வாலா மற்றும் பிரபல தேர்தல் ஆலோசகர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளார். இக்குழுவிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்குகிறார். சுனில் கனுகோலு கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தேர்தல் ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காஷ்மீர் முதல் குமரி வரை செல்லும் "பாரத் ஜோடா யாத்திரை" திட்டமிடல் குழுவில் சசி தரூர் , தீக்விஜய் சிங், சச்சின் பைலட் , ரவ்நீத் சிங் பிட்டு , கரூர் எம்.பி. ஜோதிமணி , கே.ஜி ஜார்ஜ் , சலீம் அகமது மற்றும் சிலர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.