ETV Bharat / bharat

புதுச்சேரியில் ரசாயன தொழிற்சாலை வெடி விபத்து.. கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் படுகாயம்! சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 1:11 PM IST

chemical factory boiler explosion in Puducherry
புதுச்சேரியில் ரசாயன தொழிற்சாலை விபத்து.. காயம் அடைந்தோர் ஜிப்மர் மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி..

Chemical factory boiler explosion in Puducherry: புதுச்சேரி உள்ள ஆக்டிவ் பார்மா என்ற ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன்கள் வெடித்து ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் ரசாயன தொழிற்சாலை விபத்து.. காயம் அடைந்தோர் ஜிப்மர் மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி..

புதுச்சேரி: கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் நிறுவனம், சோலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை இயக்கி வருகிறது. ஒரு ஷிப்ட்டிற்கு 300 பேர் என வேலை செய்யும் சூழ்நிலையில் நேற்று (4ஆம் தேதி) இரவு ஷிப்ட் முடிந்து தொழிலாளர்கள் மாறும் நேரத்தில் தொழிற்சாலையில் தெற்கு பக்கம் உள்ள கட்டிடத்தில் 3 கொதிகலன்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

எப்போதும் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் சூழ்நிலையில் ஷிப்ட் மாற்றும் நேரத்திற்கு உள்ளே வந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு வெளியே ஓடி வந்தனர். உடனே அவர்களுக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர வரவழைக்கப்பட்டு ப்பிம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காலாப்பட்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் ரசாயன புகையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தகவல் அறிந்து தொழிற்சாலைக்குள் வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிர்வாகத்தை கண்டித்து விபத்து நடந்த கட்டிடத்திற்கு சென்று அங்குள்ள கண்ணாடிகளை அடித்து நொருக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் பொதுமக்கள் வாயிற் கதவு அருகே நின்று கொண்டு நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், வன்னியர் பேரவை தலைவர் செந்தில் ஆகியோர் வந்து விவரங்களை கேட்டறிந்தனர்.

இப்படி மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன புகையால் கண் எரிவதாகவும், மூச்சுத்தினறல் ஏற்படுவதாகவும் கூறி அருகில் உள்ள சுனாமி குடியிருப்பில் இருந்த மீனவ மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி கடற்கரை கிராம பகுதிக்கு சென்றனர்.

மேலும், இந்த விபத்தில் 8 பேர் மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 6 பேர் உயர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மேல் சிகிச்சைக்காக 5க்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், இந்த விபத்து குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தீயணைப்பு துறையினர் தீ விபத்து எப்படி நடந்தது என்றும், அறிவியல் தொழில்நுட்ப துறையினர் சுற்றுசூழல் பாதித்துள்ளதா என்றும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்த விபத்து குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ரசாயன தொழிற்சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் புதுச்சேரி அரசு, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

இத்தகைய விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை அறிய முறையான விசாரணை நடத்தப்படும். எதிர்காலத்தில் இது மாதிரியான விபத்துக்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை காவல் துறையினர் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரம் அறிய குடும்பத்தினருக்கு தகவல் சேவை மையம் மூலம் செய்திகள் அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரம் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு விழா! வானில் சாகசம் நிகழ்த்திய ராணுவ வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.