Exclusive: காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது குப்பையில் வாக்குகளை போடுவதுபோலாகும் - அரவிந்த் கெஜ்ரிவால் பிரத்யேக நேர்காணல்

author img

By

Published : Nov 16, 2022, 10:26 AM IST

Updated : Nov 16, 2022, 1:30 PM IST

Exclusive: Arvind Kejriwal, Isudan Gadhvi eye Gujarat elections

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நடக்கவிருக்கிறது. ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வியை டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் ஈடிவி பாரத் குஜராத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு.

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. குஜராத்தில் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளரை மக்களே தீர்மானிக்கலாம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அந்த வகையில் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, பொதுச் செயலாளர் மனோஜ் சொராதியா, இணைப் பொதுச் செயலாளர் இசுதான் காத்வி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இவர்களில் ஒருவரை மக்களே தேர்வு செய்து 6357000360 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமோ அல்லது aapnocm@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பரிந்துரை நவம்பர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை நடந்தது. அதனடிப்படையில் மக்களின் ஆதரவு பெற்ற இசுதான் காத்விக்கே குஜராத் மாநில ஆம் ஆத்மியின் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பின் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கட்சிகள் மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே ஈடிவி பாரத் குஜராத் ஊடகம் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் குஜராத் மாநில முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி இருவரிடம் சிறப்பு நேர்காணலை நடத்தியது. அதில் இருவரும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவை பின்வருமாறு.

கேள்வி: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 3 மாதங்களாக மட்டுமே பரப்புரை செய்து வருகிறது. எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் (அரவிந்த் கெஜ்ரிவால்): நாங்கள் மக்களுக்கு என்ன சொல்லவருகிறோம் என்பதை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியாக முதல்முறை மாநிலத்தில் பணவீக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று உறுதியளித்துள்ளோம். அதேபோல விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவோம். எளிய மக்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், குடும்பத்தை நடத்த முடியவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தால், மார்ச் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் ரத்து செய்யப்படும். அதன்மூலம் மின்சாரக் கட்டணம் மக்களின் சேமிப்பாக மாறும். டெல்லியில் சிறந்த பள்ளிகள், நிறுவனங்கள் உள்ளன. அதைப்போலவே குஜராத்தில் உருவாக்குவோம்.

கேள்வி: குஜராத்தில் யாருடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

பதில் (அரவிந்த் கெஜ்ரிவால்): மற்ற கட்சிகளை போலல்லாமல் ஆம் ஆத்மி கட்சியில் தனி நபர் நிர்வாகம் மட்டுமே இருக்கும். அதனால் மக்கள் 'ஜனதா ஜனார்தன்' (பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு) என எங்களுக்கே வாக்களிப்பார்கள். எங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு எங்கு பலம் அதிகம். சவுராஷ்டிரா அல்லது தெற்கு குஜராத்?

பதில் (அரவிந்த் கெஜ்ரிவால்): சௌராஷ்டிரா அல்லது தெற்கு குஜராத் மட்டுமல்ல. ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்தில் இருந்தே நாங்கள் வாக்குகளைப் பெறுவோம். வெற்றி பெறுவோம்.

கேள்வி: குஜராத் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில் (அரவிந்த் கெஜ்ரிவால்): பஞ்சாபில் நாங்கள் அதைச் செயல்படுத்தி காட்டியுள்ளோம். பஞ்சாப் அமைச்சரவை கூடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஏகமனதாக ஒப்புதல் பெற்றோம். குஜராத்தில் ஆட்சி அமைத்தால் ஒரு மாதத்திற்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: பஞ்சாப் மற்றும் குஜராத் மாநில தேர்தல்களுக்கு இடையே என்ன வித்தியாசம்?

பதில் (அரவிந்த் கெஜ்ரிவால்): இரண்டு மாநிலங்களிலும் மக்கள் பிரச்சனைகளே மேலோங்கி உள்ளன. பொதுவாகவே மக்கள் விரும்புவது தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் எங்கு சென்றாலும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் காணப்படுகிறது.

இதை எங்கள் கட்சியால் மட்டுமே மாற்ற முடியும். மற்ற கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கும் ஒருபோதும் நிறைவேற்றாது. மக்கள் கொடுமைப்படுத்தப்பட விரும்பினால் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். நல்ல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வேண்டும் என்றால் ஆம் ஆத்மியிடம் வாருங்கள். இலவச மின்சாரம் வேண்டுமானால் எங்களிடம் வாருங்கள்.

கேள்வி: விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்துவோம் என்று பல ஆண்டுகளாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் (இசுதன் காத்வி): விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று 2017ஆம் ஆண்டு பாஜக வாக்குறுதி அளித்தது. இப்போது 2022ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால் வருமானம் இரட்டிப்பாகவில்லை. மாறாக அவர்களது செலவினங்கள் இரட்டிப்பாகிவிட்டன. நாடு முழுவதும் 53 லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்தும் லாபம் கிடைக்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கு முறையாக தண்ணீர், மின்சாரம் கிடைப்பதில்லை. அதேபோல சட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே உள்ளன.

ஆகவே, பாஜகவை நம்ப வேண்டாம். ஒட்டுமொத்த குஜராத் மக்களும் பாஜகவால் சலிப்படைந்துள்ளனர். பாஜகவுக்கு மேலும் 5 ஆண்டுகள் கொடுத்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. மோர்பி தொங்கு பாலம் 150 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பிரிப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி எவ்வளவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

பதில் (அரவிந்த் கெஜ்ரிவால்): காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உங்கள் ஊடகம் மூலம் மக்களிடம் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது வாக்குகளை குப்பையில் போடுவது போன்றது. இன்றைய சூழலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது என்பது முதல் விஷயம். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியே அமைக்கும் என்பது இரண்டாவது விஷயம். ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தால் தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளடைவில் பாஜகவில் இணைவார்கள். சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றதே. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுடன் இதை சொல்கிறேன். எங்கள் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு நேர்காணல்

இசுதன் காத்வி பின்புலம்: குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தில் உள்ள பிபாலியா கிராமத்தில் இசுதன் காத்வி 1982ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிறந்தார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 2005ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் பணியாற்றினார். அதன்பின் 2007-2011 ஆண்டுகளில் ஈடிவி குஜராத்தி ஊடகத்தில் போர்பந்தர் பத்திரிகையாளராக பணியாற்றினார். 2015ஆம் ஆண்டில் பிரபல விடிவி தொலைகாட்சியில் பிரைம்-டைம் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி 2021ஆம் ஆண்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். இப்போது குஜராத் மாநில முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் வாழும் அனைவரும் இந்து: ஆர்எஸ்எஸ் தலைவர்

Last Updated :Nov 16, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.