ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 4 கோடியில் ‘மண் நல அட்டைகள்’ - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
வேளாண் சேவைகள், அரசுத் திட்டங்கள் குறித்த விவரங்களை கைப்பேசி வாயிலாக பெறும் வகையில், ‘உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

Published : August 6, 2026 at 1:31 PM IST
சென்னை: 2026-27 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மண் நல அட்டைகள், மானிய விலையில் தானிய விதைகள், நிரந்தர மண்புழு உரக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தவெக அரசின் ‘வெற்றி தமிழகம் - தொலைநோக்கு பார்வை’யின்படி வேளாண் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் குறித்து நேற்று தலைமை செயலகத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் ர. வினோத் இதனை தாக்கல் செய்தார். அதில், முதன்மையாக மண்வளம் பாதுகாப்பு குறித்த திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026 - 2027#CMJosephVijay | #TNDIPR | #TNAgribudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @vinothravi11 | pic.twitter.com/XOeoqkBzgU
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2026
மண்வள பாதுகாப்பிற்கான திட்டங்கள்
‘உழவர்களின் நண்பர்கள்’ என்று அழைக்கப்படுகிற மண்புழுக்கள் பெருகும் வகையில் மண் வளத்தை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் செம்மண், கரிசல் மண், வண்டல் மண், சாம்பல் நிற மண் உள்ளிட்ட பல்வேறு மண் வகைகள் உள்ளன. ரசாயன பயன்பாட்டால் இவற்றிலுள்ள கரிமப் பொருட்களின் அளவு குறைவதால் மண் நலனும் வேளாண் உற்பத்தி திறனும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, மண்ணில் வளத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளமான தமிழ்மண்ணை வருங்கால தலைமுறைகளுக்கும் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் ரூ.600 கோடி மதிப்பீட்டில், இந்த ஆண்டின் புதிய திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மண் வளத்தை அறிந்து, தகுந்த சீரான உரங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, ரூ. 4 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில் ‘மண் நல அட்டைகள்’ வழங்கப்படும்.
கூடுதலாக, உழவர் அடையாள எண் பெற்ற சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு, ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ், 6 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மண் நல அட்டைகள் வழங்கப்படும்.
மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிற்கு தேவையான தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உர விதைகளும், 22 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்குத் தேவையான பல்வகை தானிய விதைகளும் விவசாயிகளுக்கு மாநில மானிய விலையில் வழங்கப்படும்.
வளர்ந்த பசுந்தாள் பயிர்களை நிலத்தில் மடக்கி உழுது மண் செழுமையை மேம்படுத்தும் வகையில், ஏக்கருக்கு 3,000 உழவு மானியமும் வழங்கப்படும். இதற்கென 63 கோடியே 50 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
மண் வளத்தைப் பாதுகாக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், ஒரு லட்சம் ஏக்கருக்குத் தேவையான திரவ உயிர் உரங்கள் 4.50 கோடி செலவில் வழங்கப்படும்.
உரப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் நீரில் கரையக்கூடிய உரங்கள் மற்றும் மகசூலை அதிகரிக்கும் நோக்கில் பருத்திக்கான காட்டன் ப்ளஸ், கரும்புக்கான சுகர்கேன் பூஸ்டர், நெற்பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைஸ் ப்ளூம் ஆகிய பயிர் ஊக்கிகளும் ரூ.12.38 கோடி செலவில் விநியோகிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உயிர்ம வேளாண்மையைப் பரவலாக்கும் நோக்கில், 2026-27ஆம் ஆண்டில், மாநில அரசின் சிறப்புத் திட்டமாக 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண்மை முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 4,000 என்ற அளவில் சிறப்பு உதவித்தொகை வழங்க 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பரம்பரை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைத்து 7,050 ஏக்கரை உள்ளடக்கிய உயிர்ம வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
இயற்கை வேளாண்மை மூலம் மண் வளத்தை மேம்படுத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கீழ், 3,125 ஏக்கரில் புதிய இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கப்படுவதுடன், 7,005 ஏக்கரில் ஏற்கனவே இயற்கை வேளாண்மை மேற்கொண்டு வரும் விவசாயிகள் இரண்டாம் ஆண்டு செயல்பாடுகளைத் தொடரவும், 2026-27ஆம் ஆண்டில் ரூ.9.12 கோடி ஒன்றிய-மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயிர்ம வேளாண்மையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நிரந்தர மண்புழு உரக் கூடங்கள் அமைப்பதற்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பதிவுக் கட்டணத்திற்கும், மாறுதல் காலத்திலுள்ள விவசாயிகளுக்கான புதுப்பித்தல் கட்டணத்திற்கும் விலக்கு அளிக்கப்படுவதோடு, உயிர்ம விவசாயிகளுக்கு ‘வாய்ப்புச் சான்றிதழ்’ இலவசமாக வழங்கப்படும்.
உயிர்ம விளைப்பொருட்களில் நச்சுப் பொருட்களின் தன்மையை அறிந்து, நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்க ரூ. 25 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
வளம் குறைந்த நிலங்களை மீட்டெடுக்க மண் சீர்திருத்தம் குறித்து 2,000 ஏக்கரில் செயல்விளக்கம் மேற்கொள்ளவும், விழிப்புணர்வு மற்றும் விளம்பர பணிகளுக்காகவும் தலா ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆக மொத்தம், மண்வள பாதுகாப்பிற்காக 2026-27ஆம் நிதியாண்டில் 122 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026 - 2027#CMJosephVijay | #TNDIPR | #TNAgribudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @vinothravi11 | pic.twitter.com/zsgqQsmJrS
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2026
| இதையும் படிங்க: அஞ்சலையம்மாள், வெற்றி விவசாயி, நம்மாழ்வார் விருதுகள் - வேளாண் பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு |
செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்
மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டுமென்ற நோக்குடன் தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றலுக்கு உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என அனைத்து தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றுடன், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள், அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாக பெறும் வகையில், 2026-27ஆம் ஆண்டில் ‘உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

