வைகை அணையில் தண்ணீர் திருட்டு - ஆட்சியர் ஆய்வில் சிக்கிய மின் மோட்டார்கள்
அணையிலிருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்த நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Published : July 30, 2026 at 5:36 PM IST
தேனி: வைகை அணையில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மூன்று மின் மோட்டார்கள், 45 பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்திருக்கிறது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த அணையின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பருவ மழை பெய்யாததால் கடந்த சில மாதங்களாக அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 33 அடியாக கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாய பாசனத்திற்கும், பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைகை அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனையடுத்து வைகை அணையின் நீர்த் தேக்க பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
| இதையும் படிங்க: கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா பகுதிகளை பார்வையிட செய்ய வேண்டும் - பி.ஆர் பாண்டியன் |
அப்போது அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் இருந்து மின் மோட்டார் மூலமாகவும், பைப்புகள் மூலமாகவும் தண்ணீர் திருடப்படுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்கு பயன்படுத்திய புட்வால்வு (Foot Valve) பொருத்தப்பட்ட 45 பைப்புகள் மற்றும் மூன்று மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அணையிலிருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்த நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பருவ மழை பெய்யாமல் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து போதிய அளவில் தண்ணீர் வராததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைகை அணையில் சட்ட விரோதமாக தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

