ETV Bharat / state

உசிலம்பட்டி டூ மதுரை: 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட தொடக்க விழாவில் அதிரடி மாற்றமா?

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களின் குழந்தைகள், அரசு மருத்துவமனைகளில் பிறந்தால் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும்.

முதலமைச்சர் விஜய் - கோப்புப்படம்
முதலமைச்சர் விஜய் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 22, 2026 at 7:52 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், அது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தொடக்க தேதி மாற்றப்பட்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, திட்டத்தை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடம் உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன்படி, செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களின் குழந்தைகள், அரசு மருத்துவமனைகளில் பிறந்தால் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் பயன்கள் 2026 ஜூன் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தங்க மோதிரத்துக்கும் தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், சேதப்படுத்த முடியாத பாதுகாப்பு பெட்டகத்தில் மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 107 மையங்கள் மூலம் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு மீண்டும் இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படுமா? ஆட்சியரிடம் மனு

அதேபோல், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் திட்டத்தை தொடங்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.