ETV Bharat / state

காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாணவ மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவை ருசித்த முதலமைச்சர் விஜய்
மாணவ மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவை ருசித்த முதலமைச்சர் விஜய் (TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 22, 2026 at 6:58 AM IST

|

Updated : September 22, 2026 at 9:24 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் வயிற்று பசியின்றி கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தும் வகையிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் தலைமையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று இத்திட்டத்தை சென்னை திருவான்மியூர் காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்.

யாரெல்லாம் பயன்பெறுவர்?

திட்டத்தின் விரிவாக்கம் மூலம், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ.724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும்.

முதல்வர் விஜய் தலைமையில் செப்.18 அன்று நடந்த ஆய்வுக் கூட்டம்
முதல்வர் விஜய் தலைமையில் செப்.18 அன்று நடந்த ஆய்வுக் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

ஊரகப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவை தயாரித்து வழங்க உள்ளனர். இதன் மூலம் கூடுதலாக 7,537 பள்ளிகள் பயன்பெற உள்ளதுடன், ஒட்டுமொத்தமாக 44,984 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்டம்பர் 28-இல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

காலை உணவுத் திட்டத்திற்கான சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாணவர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated : September 22, 2026 at 9:24 AM IST