ETV Bharat / education-and-career

ஆராய்ச்சிக்கான ஜே.சி. போஸ் உதவித்தொகை பெறும் 6 சென்னை ஐஐடி பேராசிரியர்கள்!

இந்தியாவில் உள்ள மூத்த விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் அவர்களின் மேம்பட்ட ஆராய்ச்சிகளையும் அங்கீகரிக்கும் விதமாக ஜே.சி. போஸ் மானியம் வழங்கப்படுகிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 7, 2026 at 11:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர்கள் 6 பேருக்கு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஜே.சி. போஸ் மானியம் (J.C. Bose Grant) வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்படும் இந்தியாவிலேயே மதிப்புமிக்க மானியம் (உதவித்தொகை) இதுவாகும்.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (இயந்திர பொறியியல் துறை), பேராசிரியர் தலப்பில் பிரதீப் (வேதியியல் துறை), பேராசிரியர் தீபா வெங்கிடேஷ் (மின் பொறியியல் துறை), பேராசிரியர் ஜிதேந்திரா சங்வாய் (ரசாயன பொறியியல் துறை), பேராசிரியர் ராமகிருஷ்ணன் சுவாமிநாதன் (பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறை), பேராசிரியர் சுந்தரகோபால் கோஷ் (வேதியியல் துறை) ஆகியோருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் ஏஐ பல்கலைக்கழகம் - அமைச்சர் குமார் தகவல்

தேசிய அளவில் மதிப்புமிக்கதாக கருதப்படும் இந்த ஜே.சி. போஸ் மானியத்தை பெற்ற பேராசிரியர்களுக்கு, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மானியம் பெற்ற அனைத்து பேராசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக சென்னை ஐஐடி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளின் மேம்பட்ட தரத்தை இது வெளிப்படுத்தியுள்ளது" என பாராட்டினார்.

ஜே.சி. போஸ் மானியம் என்றால் என்ன?

இந்தியாவில் உள்ள மூத்த விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் அவர்களின் மேம்பட்ட ஆராய்ச்சிகளையும் அங்கீகரிக்கும் விதமாக ஜே.சி. போஸ் மானியம் வழங்கப்படுகிறது.

மிகச்சிறந்த அறிவியல் ஆராய்ச்சிகளை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் விதமாக இந்த மானியம் வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு இந்த மானியம், குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

ஆராய்ச்சி மானியம் பெற்ற பேராசிரியர்கள் பற்றி..

1. பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (இயந்திர பொறியியல் துறை)

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மற்றும் செயற்கை உறுப்புகள் தயாரிப்பு மையத்தின் தலைவராகவும் உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் பல உபகரணங்கள் மற்றும் கருவிகளை இவரது தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

பேராசிரியர் சுஜாதா சீனிவாசன்
பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (ETV Bharat Tamil Nadu)

மோட்டார் பொருத்தப்பட்ட நவீன வீல் சேர், ஒரு சக்கர வீல் சேர், செயற்கை மூட்டு உள்ளிட்ட பல கருவிகளை இவரது குழு பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருாக்கியுள்ளது.

2. பேராசிரியர் தலப்பில் பிரதீப் (வேதியியல் துறை)

தூய்மையான நீரை பயன்படுத்தி பல தொழில்நுட்பங்களை இவர் உருவாக்கியுள்ளார். நானோ சாதனங்கள், பனிக்கட்டி வேதியியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்.

பேராசிரியர் தலப்பில் பிரதீப்
பேராசிரியர் தலப்பில் பிரதீப் (ETV Bharat Tamil Nadu)

பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர், குறைந்த விலையிலான நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி சாதனை படைத்தனர். இவர் கண்டறிந்த முறையை பயன்படுத்தி இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. பேராசிரியர் தீபா வெங்கடேஷ் (மின் பொறியியல் துறை)

அதிவேக ஆப்டிகல் கம்யூனிகேஷன் மற்றும் மைக்ரோவேவ் ஃபோட்டோனிக்ஸ் சம்பந்தமாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் அளப்பரியவை.

பேராசிரியர் தீபா வெங்கடேஷ்
பேராசிரியர் தீபா வெங்கடேஷ் (ETV Bharat Tamil Nadu)

சென்னை ஐஐடியில் இந்தியாவின் முதல் மல்டிகோர் ஃபைரர் கள சோதனை தளத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

4. பேராசிரியர் ஜிதேந்திர சங்வாய் (வேதிப் பொறியியல் துறை)

கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு, எரிவாயு ஹைட்ரேட்டுகள் மற்றும் எண்ணெய் எரிவாயு பொறியியல் ஆகியவை தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

200-க்கும் மேற்பட்ட சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகள் 11 ஆயிரம் முறை பிற ஆய்வாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 43 காப்புரிமைகளை பெற்றவர்.

5. பேராசிரியர் ராமகிருஷ்ணன் சுவாமிநாதன் (உயிரி மருத்துவப் பொறியியல்)

மூளை மற்றும் தசை செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்வதற்கான மருத்துவ சாதன வடிவமைப்பு மற்றும் பயோ மெடிக்கல் கருவிகள் தயாரிப்பில் ஆய்வு மேற்கொள்கிறார்.

மருத்துவக் கருவிகள் மூலம் துல்லியமான நோயறிதல் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். 550-க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பேராசிரியர் சுந்தர்கோபால் கோஷ்
பேராசிரியர் சுந்தர்கோபால் கோஷ் (ETV Bharat Tamil Nadu)

6. பேராசிரியர் சுந்தர்கோபால் கோஷ் (வேதியியல் துறை)

டிரான்சிஷன் மெட்டல் போரன் வேதியியலில் பல முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். போரான் சார்ந்த மூலக்கூறு அமைப்புகளின் பிணைப்பு மற்றும் வேதிவினைகள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். சர்வதேச இதழ்களில் 325-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.