ETV Bharat / education-and-career
ஜேஇஇ அவசியமில்லை; சென்னை ஐஐடியின் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு மே-31 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடியில் வழங்கப்படும் பிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published : May 11, 2026 at 7:32 PM IST
சென்னை: சென்னை ஐஐடியில் ஆன்லைன் வழியில் வழங்கப்படும் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு மே 31-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் வழங்கப்படும் பிஎஸ் பட்டப்படிப்புக்கான 2026-27 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் (BS in Data Science and Applications), பிஎஸ் மின்னணு பயன்பாடுகள் BS in Electronic Systems), பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் (BS in Management and Data Science), பிஎஸ் வானியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் (BS in Aeronautics and Space Technology) ஆகிய 4 பட்டப்படிப்புகள் ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது.
உயர்தரமான ஐஐடி கல்வியை அதிகளவிலும், பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்காக இப்பட்டப்படிப்புகள் வடிவமைக்கப்பட்டன. வயது வரம்பின்றி 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் இப்படிப்புகளில் சேர்க்கை பெற்று படிக்கலாம். இவை தனி பட்டப்படிப்பாகவோ அல்லது வழக்கமான கல்லூரி பட்டப்படிப்புடன் இணைத்தோ படிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதனால், ஐஐடியில் படிக்க விரும்பும் மாணவர்கள் இப்படிப்புகள் நேரடியாக சேர்க்கை பெறலாம். அதே போன்று, வேறு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களும் இப்படிப்புகளில் சேர்ந்து கற்கலாம்.
ஆன்லைன் வழி கல்வி
இப்படிப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. கல்வியின் தரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் உறுதிப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப படிப்பை தொடர முடியும். அவர்களின் கல்வி, தொழில் நோக்கங்களுக்கு ஏற்ப சான்றிதழ் (Certificate), டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree) போன்ற பல்வேறு நிலையில் வெளியேறும் வாய்ப்புகள் இப்படிப்பில் உள்ளது.
ஜேஇஇ தேர்வு அவசியமில்லை
வழக்கமான பொறியியல் படிப்புகளைப் போல அல்லாமல், இந்த பிஎஸ் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெறவேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, தகுதி காண நடைமுறை மூலம் மாணவர்கள் சேர முடியும்.
| இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெற கட்டண உயர்வு |
சிறப்பம்சங்கள் என்னென்ன?
- இந்த பிஎஸ் பட்டப்படிப்புகளின் முக்கிய சிறப்பம்சம், மற்ற இளங்கலைப் படிப்புகளுடன் இணைந்து படிக்கலாம்.
- பிகாம், பிஎஸ்சி, பிபிஏ அல்லது பொறியியல் படிக்கும் மாணவர்கள் ஒரே நேரத்தில் சென்னை ஐஐடி BS படிப்புகளிலும் சேரலாம்.
- இதன் மூலம் அவர்கள் தங்களது முக்கியப் பாடப்பிரிவுடன் சேர்த்து பகுப்பாய்வு திறன், தொழில்நுட்ப திறன், முடிவெடுக்கும் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
- நடைமுறைக் கற்றல், நடைமுறைப் பயன்பாடுகள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தொழில் துறை, கல்வித் துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ஐஐடியின் https://study.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளில் சேர்வதற்கு மே 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
இப்படிப்புகள் குறித்து சென்னை ஐஐடி டீன் (பாடத்திட்டங்கள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, ”தற்போதைய சூழலில், மாணவர்கள் தங்கள் முதன்மைப் பட்டப்படிப்பைத் தாண்டியும் தரவு அறிவியல், தொழில்நுட்பம், பல்துறை சிந்தனை ஆகிய துறைகளில் வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது.
இந்தப் படிப்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு சென்னை ஐஐடி தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் அவர்களின் தொழில் வாய்ப்புகள் பெரிதும் மேம்படும்” என்றார்.

