ETV Bharat / state

கோவை வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்த பக்தர் பலி.. 2 மாதங்களில் 8 பேர் உயிரிழப்பு! - Velliangiri

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 1:34 PM IST

Updated : Apr 23, 2024, 1:56 PM IST

Etv Bharat
Etv Bharat

Coimbatore Velliangiri Mountains: வெள்ளிங்கிரி மலையில் தவறி விழுந்த திருப்பூர் எஸ்.வி.காலனி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் 'தென்கைலாயம்' என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி.காலனி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். மறுநாள் காலையில் ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசித்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

இதில் அவரது வயிறு மற்றும் தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் மீட்டு கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிங்கிரி மலை: சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் வெள்ளங்கிரி மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மலைகள் மிகவும் கரடு முரடாக இருப்பதாலும் செங்குத்தாக இருப்பதாலும் 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

8 பேர் உயிரிழப்பு: அதன்படி இந்த ஆண்டுக்கான மலையேற்றம் பிப்ரவரி 12ம் தேதி துவங்கியது. மலையேற்றம் ஆரம்பித்தவுடன் இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து மூச்சு திணறலால் உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் 3 மற்றும் 5 வது மலையில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்தனர். அங்கு பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, மலை ஏற அனுமதிக்கபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனையடுத்து மார்ச் 30ம் தேதி சென்னையை சேர்ந்த ரகுராமன் (60) ஐந்தாவது மலையில் சீதை வனம் அருகில் சென்ற போது, அவருக்கு உடல் நலம் பாதிப்பினால் உயிரிழந்தார். பின்னர் கடந்த 14ம் தேதி கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற 47 வயதான நபர், மலையேறும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தொடர் உயிரிழப்புகள் ஏன்?: உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூச்சு திணறல் உள்ளவர்கள் ஆஸ்துமா, இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது எனினும் அதனை மறைத்து மலை ஏறுவதால்
உயிர் இழப்பு ஏற்படுகிறது.

மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் உயிரிழப்புகள் தடுக்க முடியவில்லை. மேலும் தற்போது வெள்ளிங்கிரி மலை உள்ள ஏழு மலைகளையும் கண்காணிக்க வனத்துறைக்கு சொந்தமான ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அவசர தேவைக்கான சில பொருட்களை இந்த ட்ரோன் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது கடந்த ஆண்டு எட்டு பேர் உயிரிழந்த நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி வரையிலான இன்றைய தினம் வரை மட்டுமே எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த மாதம் இறுதிவரை மலையேற்றத்திற்கு அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 பேர் திருச்சி சிறையில் அடைப்பு!

Last Updated :Apr 23, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.